Wednesday, August 1, 2007

Vaiko's thiruvasagam Speech - Part II

இந்தப் பத்தொன்பது பத்துகளில் நமது இளையராஜா மூன்று பத்துகளுக்கு இசை அமைத்து இருக்கிறார். ஒன்று யாத்திரைப் பத்து. அடுத்த பத்து என்ன தெரியுமா? (வைகோ திரும்பிப் பார்க்கிறார். இளையராஜா குயில் பத்து என்கிறார். வைகோ இல்லை பிடித்த பத்து என்று கூறுகிறார்.) நீங்கள் திருவாசகத்தில் உருகி ஐக்கியமாகி விட்டீர்கள். அதனால் அப்படிச் சொன்னார்கள். நான் வெளியில் இருந்து பார்ப்பவன். நீங்கள் இசையமைத்த பாடல் ‘பிடித்த பத்து’. அடுத்த பத்து “அச்சப்பத்து” அவர் தேர்ந்தெடுத்தது இந்த மூன்று ‘பத்தி’லிருந்தும் ஒவ்வொரு பாடலுக்கு இசை அமைத்துள்ளார். இவை யன்றி அவர் சிவபுராணத்தில் இருந்து பாடல் எடுக்கிறார். ‘நமசிவாய வாழ்க’ என்னும் சொற்றொடர்தான் திருவாசகத்தின் தொடக்கம்

ஏன் இந்தத் திருவாசகம் இயற்றப்பட்டது? இது பலருக்கும் தெரிந்த கதைதான். பாண்டிய நாட்டு அரசவையில் தென்னவன் பிரமராயன் என்கிற அமைச்சர் இருந்தார். வாதவூரில் பிறந்தவர். அவர்தான் வாதவூர் அடிகள் மாணிக்க வாசகர் அவர் குதிரை வாங்குவதற்குச் சென்றபோது அரசுப் பணத்தை எல்லாம், அந்தணர் வடிவில் இருந்த சிவனடியார் உடன் சேர்ந்து, சிவனுடைய திருப்பணிகளுக்குச் செலவழித்து விட்ட காரணத்தினால், மன்னன் குதிரையோடு ஏன் வரத் தாமதம் என்று கோபித்து செய்தி அனுப்பியபோது, வாதவூரர் மனம் கலங்கிய நேரத்தில் இறைவனின் அருள்வாக்குக் கேட்டு, ‘குதிரை வரும் என்று நீ ஒலை அனுப்பு. ஓலையை அனுப்பிவிட்டு நீ முன்னால் செல். பின்னால் குதிரைகள் வரும் என்று சொல்’ என்ற சொற்களைக் கேட்டார். மாணிக்கவாசகர் என்ற பெயர் அப்பொழுது இல்லை. அவர் மன்னனிடத்தில் வந்து குதிரைகள் வந்து கொண்டு இருக்கின்றன என்று சொல்கிறார். குதிரைச் சேவகன் வருகிறான் - சிவன் வருகிறான் குதிரைச் சேவகனாக நரிகளைக் குதிரைகள் ஆக்கி வருகிறான். குதிரைகள் இலாயத்தில் கட்டப்படுகின்றன.

பிட்டுக்கு மண் சுமந்த இறைவன்

இரவு நேரத்தில் அந்தக் குதிரைகள் மீண்டும் நரிகளாக மாறித் தளைகளை அறுத்துக் கொண்டு அனைத்தையும் கடித்துப் போட்டுவிட்டு ஓடுகின்றன. ஆத்திரம் அடைந்த மன்னன் வாதவூரரைச் சிறையில் பூட்டுகிறான். சிறையில் கொடுமைகள் நடக்கின்றன. இறைவன் மேலும் திருவிளையாடல் செய்கிறான். வைகையில் தண்ணீர் பெருக்கு எடுக்கிறது. காலங்கெட்ட காலத்தில் வைகையில் தண்ணீரா? கரை உடைத்துப் பாய்கிறதே வெள்ளம் என்று கவலைப்பட்ட மன்னன் கரையை அடைப்பதற்கு வீட்டுக்கு ஒவ்வொருவராக வந்து பணியாற்றக் கட்டளை இடுகின்றான்.

அப்போதுதான் பிட்டு வாணியச்சியான வந்திக்கு - செந்தமிழ்ச்செல்விக்கு - அந்தக் கிழவிக்குக் கரையை அடைப்பதற்கு வீட்டில் பிள்ளை ஒருவரும் இல்லை யாதலால் இறைவன் சிறுபிள்ளையாக மண்வெட்டி யுடனும், கூடையுடனும் ஓடிச்சென்று, ‘நான் கரையை அடைக்கிறேன். என்ன கொடுப்பாய்?’ என்று கேட்டான். அதற்கு வந்தி, ‘என்னிடம் ஒன்றும் இல்லை. உதிர்ந்த பிட்டு மட்டும்தான் இருக்கிறது’ என்று சொல்ல, பிட்டை வாங்கிக் கொண்டு, இவன் கரையையும் அடைக்காமல் தண்ணீரில் குதிப்பதும், நீந்துவதும், விளையாடுவதுமாக இருக்க, சேவகன் அதைக்கண்டு பிரம்பால் அடிக்க, அவன் முதுகில் விழுந்த அடி, அனைவரின் முதுகிலும் விழுந்தது, மன்னர் முதுகிலும் விழுந்தது.

வானத்தில் இருந்து எழுந்த ஒலி ‘சிறையில் இருக்கக்கூடிய வாதவூர் அடிகளை விடுவித்திடுக’ எனக் கூற, அதன்பிறகு மன்னன் வேதனையுற்று விடுவிக்க, வெளியே வந்த வாதவூர் அடிகள் ஆலவாய்ச் சொக்கர் இடத்தில் அருள்பெற்றுப் புறப்படுகிறார். ‘போய் வா ஒவ்வொரு இடமாக பல்வேறு ஆலயங்களுக்குச் சென்று, உத்திரகோசமங்கையில் - காளையார் கோவிலில் சென்று, திருமுதுகுன்றத்தில், திருக்கழுக் குன்றத்தில் எல்லா இடங்களையும் தரிசித்துவிட்டுக் கடைசியில் திருச்சிற்றம்பலத்துக்கு வந்து சேர்வாய்’ என அருள்வாக்கு சொன்னபடி சிற்றம்பலத்துக்குப் போனார். அங்கே திருவாசகத்தைப் பாடினார்.

இதுதான் திருவாசகம் தோன்றுவதற்கான அடிநாதம். ‘நமசிவாய வாழ்க’ என்றுதான் முதலில் தொடங்குகிறது. ஆனால், நம்முடைய இளையராஜா அவர்கள் அதை முதலில் வைக்கவில்லை. முதலில் யாத்திரைப் பத்து வைக்கிறார். யாத்திரைப் பத்து என்றால் என்ன? பயணம் புறப்படுவோம் இந்த மண்ணுலகைவிட்டு, இச்சைகளை விட்டு றுந ளவயசவ வாந தடிரசநேல என்று சொல்லுகிறவர்கள்.

‘பூவார் சென்னி மன்னனெம் புயங்கப்
பெருமான் சிறியோமை
ஓவா துள்ளங் கலந்துணர்வாய் உருக்கும்
வெள்ளக் கருணையினால்
ஆ ஆ என்னப் பட்டன்பாய் ஆட்பட்
டீர்வந் தொருப்படுமின்
போவோம் காலம் வந்ததுகாண் பொய்விட்
டுடையான் சுழல்புகவே'.


இது யாத்திரைப் பத்து. அதற்கு அடுத்து சிவபுராணத்தைப் பாடுகிறார். எடுத்த எடுப்பில் ‘நமசிவாய வாழ்க’ என்று வைக்காமல்

....... நின் பெருஞ்சீர்
‘பொல்லா வினையேன்
புகழுமாறு ஒன்றறியேன்’


‘உன்னைப் புகழக்கூடிய அறிவு ஆற்றல்எனக்கு இல்லையே’ என்று மாணிக்கவாசகர் பாடுகிற பாடலை வைத்து இருக்கிறார். இவர் மாணிக்கவாசகர் ஆகி விடுகிறார். ஏறக்குறைய நான் 20 முறை இந்த இசைப் படைப்பைக் கேட்டேன். அதைக் கேட்கும்போதுதான் ஏன் இந்தப் பாடலை வைத்தார்?- என்று எண்ணினேன்.

இந்தப் ‘பொல்லா வினையேன்’ என்ற பாடலைப் பாடும்போது, அமெரிக்கா நாட்டிலும், இங்கிலாந்து நாட்டிலும் இசைக்கருவிகளை இசைக்கக்கூடிய ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இசை அமைத்து வெற்றி கண்ட - விருது பெற்ற மாமேதை எழுதிய ஆங்கில வரிகளுக்கு இசைக்கருவிகளை இசைக்கிறார்களே, அந்தப் பாடல்களைத்தான் கேட்டீர்கள். பொல்லா வினையேன் என்று சொல்கிறபோது, I am just a man imperfect lowly.. அடுத்தவரிகள் How can I reach for something Holy... - பாடலும் மிக அருமையான பாடல். அந்த உன்னதமான இடத்தை நான் எப்படி அடைய முடியும்? இந்தப் பாடலை வைத்துவிட்டு, அதன் பிறகுதான்

‘நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகமம் ஆகி நின்றண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க’


எனும் சிவப்புராண வரிகளை வைத்து இருக்கிறார் இளையராஜா இந்தப் பாடலை இரண்டாவது பாடலாக வைத்து இருக்கிறார். அடுத்தப் பாடலும் மிக அருமையான பாடல்.

மாணிக்கவாசகர் மதுரையில் போய்க் கொண்டு இருக்கிறார். ஆங்காங்கு பெண்கள் மர நிழல்களில், வீடுகளில், முற்றங்களில், ஊஞ்சல்களில், அமர்ந்த வாறும், நின்றவாறும் பாடிக் கொண்டு இருக்கிறார்கள். இளம் சிறுவர்கள் ஆங்காங்கு ஒடித் திரிகிறார்கள். கிளிகள் கொஞ்சுகின்றன. சோலையில் குயில்கள் கூவுகின்றன. இதைப்பார்க்கின்ற வேளையில், அங்கே தும்பிகள், வண்டுகள் ரீங்காரம் செய்து பாடிக் கொண்டு பறக்கின்றன. அது அரச வண்டு. அந்த வண்டினைப் பார்த்துச் சொல்கிறார். ‘ஏன் இப்படிப் பாடித் திரிகிறீர்கள்? இறைவனின் காலடியில் போய்ப் பாடுங்கள்’ என்று சொல்வதற்காக

‘தினைத்தனை உள்ளதோர் பூவினில்தேன் உண்ணாதே
நினைத்தொறும், காண்டொறும் பேசுந்தொறும் எப்போதும்
அனைத்தெலும்பும் உள்நெக ஆனந்தத்தேன் சொரியும்
குனிப்புடையானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ’


எனப் பாடுகிறார். இதுதான் அவர் அமைத்து இருக்கின்ற பாடல். அதற்கு அடுத்து எங்கே வருகிறார்? “பிடித்தப் பத்து”ப் பாடலை எடுத்தாள்கிறார் இளையராஜா

இதோ அந்தப் பாடல்:

“அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்தஆ ரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.”


ஆக, பிடித்தப் பத்தில் இந்தப் பாடலைச் சொன்னார். அவன்தான் தமிழன்

அவன்தான் தமிழன்

இந்த நிகழ்ச்சிகள் நடக்கின்றபோது ஒரு நடனக் காட்சியை அமைத்து இருந்தார்கள். இந்த நடனக் காட்சி என்பது பாரதியார் சொல்லுவார். ‘எங்களிடமா இசை இல்லை? எங்கள் சுண்ணம் இடிக்கிற பெண்களின் இசைக்கு நிகர் உலகில் எங்கே இருக்கிறது? என்று சொன்னார் பாரதியார். அதுதான் திருப்பொற் சுண்ணம். அங்கே சுண்ணம் இடிக்கிறார்கள். சுண்ணம் இடிக்கிறபோது, உலக்கையை எடுத்து இங்கே நங்கைகள் இடித்துப் பாடினார்கள். பொற்சுண்ணம் என்பது அதுதான். உலக்கையைக் குத்துகிறபோது, சத்தத்தோடு அந்தப் பாடல் வெளி வரும்.

“முத்தணி கொங்கைகள் ஆட ஆட
மொய்குழல் வண்டினம் ஆட ஆடச்
சித்தஞ் சிவனெடும் ஆட ஆடச்
செங்கயற் கண்பனி ஆட ஆடப்
பித்தெம் பிரானொடும் ஆட ஆடப்
பிறவி பிறரொடும் ஆட ஆட
அத்தன் கருணை யொடு டாட ஆட
ஆடப் பொற் சுண்ணம் இடித்துநாமே”


இந்தப் பாட்டை ஐந்தாவது பாடலாக வைத்துவிட்டு, கடைசியாக என்ன வைக்கிறார்? அவர்தான் இளையராஜா அவன்தான் தமிழன் எவருக்கும் அஞ்சமாட்டோம். எதற்கும் அஞ்சமாட்டோம். கூற்றுவனே வந்தாலும் அஞ்சமாட்டோம். ஏன் மாணிக்கவாசகர் எழுதினார்? நாவுக்கரசருடைய கருத்து அவர் மனதிலே இருக்கிறது. பல்லவ நாட்டுச் சக்கரவர்த்தியின் மண்டபத்தில் யானையின் காலில் இட்டு உன் தலையை இடறச் செய்வோம் என்றபோதும், சுண்ணாம்புக் காளவாயில் போட்டு உயிரைப் போக்குவோம் என்றபோதும், கல்லைக் கட்டிக் கடலில் தூக்கி எறிவோம் என்றபோதும், கொல்வோம் என்று மன்னன் முடிவெடுத்தபோதும்,

‘நாமார்க்கும் குடியல்லோம்
நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம்
நடலையல்லோம்
ஏமாப்போம் பிணி அறியோம்’
இன்பமே எந்நாளும்
துன்பமில்லை.

என்று முழங்கினாரே நாவுக்கரசர் பெருமான் அதே பாடலை இங்கே மாணிக்கவாசகர் அச்சப்பத்துக்குக் கொண்டு வருகிறார்.

இளையராஜாவும் ஏறக்குறைய அப்படித்தான். எவருக்கும் தலைவணங்கமாட்டார். புகழ்ச்சிக்கும் மயங்க மாட்டார். புகழ் பலரை வீழ்த்திவிடும். பலரை வீழ்த்தி இருக்கிறது. புகழால் வீழ்த்த முடியாதவர்கள்தான் உலகில் உயர்ந்து இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு மாமனிதன் எங்கள் தமிழன் - எங்கள் தென்னாட்டுத் தமிழன். அதனால்தான் அச்சப்பத்தில் மாணிக்கவாசகர் சொல்கிறார். இதோ அந்தப் பாடல்.

“புற்றில்வாள் அரவும் அஞ்சேன்
பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்
கற்றைவார் சடைஎம் அண்ணல்
கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றுமோர் தெய்வந் தன்னை
உண்டென நினைந்தெம் பெம்மான்
கற்றிலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே.”


நெருப்பை உமிழ்கின்ற வேங்கைக்கும் அஞ்சமாட்டேன். கட்டுத்தறியை உடைத்து வருகின்ற யானைக்கும் அஞ்சமாட்டேன். வளைவில்லாமல் நேராகப் பாய்ந்து வருகின்ற அம்புக்கும் அஞ்சமாட்டேன், கூற்றுவன் சீற்றம் அஞ்சேன் - உயிர் முடிக்கும் எமனுக்கும் அஞ்சமாட்டேன்.

இதுதான் அவர் நிறைவாக வைத்த பாடல் இந்த ஆறு பாடல்களோடு நம்முடைய தமிழ் இசையைக் கொண்டு மேற்கத்திய இசைக்கருவிகளோடு, டான்யூப் நதிக்கரையில் அங்கேரி நாட்டில் புடாபெ°ட் நகரத்தில் இசைக்கலைஞர்களோடு - இசைக்கருவிகளோடு ஒலி வடிவங்களை இணைத்து - உலகின் தொன்மையான இசையை இந்த உலகத்தின் எட்டுத் திசைகளுக்கும் கொண்டு போய்ச் சேர்த்து இருக்கிறீர்கள். இதைக் கேட்க, கேட்க அவர்களின் நெஞ்சம் கவரக் கவர எவரும் செய்யாத ஒரு பணியைச் செய்து இருக்கிறீர்கள்.

நான் பாராட்ட விரும்புவது ஒரு தாய் பிள்ளையைப் பாராட்டுவதைப் போல - தமிழகமே தாயாகி விட்டது என்று சொன்னார்களே ஆனால் யார் இவரைப் பாராட்டுகிறார்கள் என்று தெரியுமா? °டீபன்°வார்ட்° (STEPHEN SCHWARTZ) ஹாலிவுட் திரைப் படங்களில் ஆ°கார் விருதுபெற்ற இசை அமைப்பாளர் அவர் இளையராஜாவைப் பாராட்டி எழுதுகிறார். Last night at Sony Studios in New york City I had the pleasure of hearing the almost finished mix of Ilaiyaraj’s amazing work. நான் நேற்று இரவு நியூயார்க் நகரத்தின் சோனி °டுடியோவில் அநேகமாக முற்றுப் பெற்றுவிட்ட, இளையராஜா அவர்களின் அற்புதமான இசை ஆல்பத்தைச் செவி கொடுத்துக் கேட்கின்ற மகிழ்ச்சியைப் பெற்றேன். It is unlike anything I have ever heard before a stunning blend of Indian and western music and instruments. I asked Mr Raja, if this was something different for him too, and he said he had never done anything like this piece before. I don’t know if anyone has. இதுவரை இப்படி உலகில் எவரும் படைத்தது இல்லை என்று ஆ°கார் பரிசு பெற்ற ஹாலிவுட்டில் இருக்கின்ற அந்த இசை மேதை சொல்லி இருக்கிறார்.

இப்படிப்பட்ட பாராட்டைப் பெற்ற நீங்கள் திருவாசகத்துக்கு சிம்பொனி ஆரடோரியோ இசை அமைத்து இருக்கிறீர்கள். தமிழ் இசை சாதி, மத எல்லைகளைக் கடந்து இருக்கின்றது. கத்தோலிக்கப் பாதிரிமார்களும், திருச்சபை பாதிரிமார்களும், தமிழுக்குத் தொண்டு செய்தார்கள் எனில் இங்கே திருவாசகத்தின் பெருமையைத் தருகிறோம் என்கிறபோது, எல்லை களைக் கடந்து ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று உலகத்துக்கு ஒரு காலத்தில் கொள்கையைத் தந்தோமே, நம்முடைய நாகரிகத்தை - நம்முடைய இசைக்கலையை உலகுக்குத் தருகின்ற இந்தப் பெருமை இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு நிற்கும். காற்றில் ஒலி அலைகள் இருக்கின்ற வரையில் மாணிக்காவாசகரின் திருவாசகம் இருக்கும். ஒலி அலைகள் இருக்கின்ற வரையில் இளையராஜாவின் படைப்புகள் இருக்கும்.

இந்த ஒலி நாடாவை முறையாக விலை கொடுத்து வாங்கிக் கேளுங்கள். அதில் இவர் சொல்லுகிறார். ஒரே ஒரு இடத்தில்தான் அவர் பேச்சு வருகிறது. முதல் ஐந்து பாடல்களைப் பதிவு செய்து முடித்தபிறகு, இளையராஜா ராக ஆலாபனை செய்கிறார். அந்த ஆலாபனை செய்கிறபோது, இசைக்கருவிகளில் இசை வருகிறது. ‘அடடா இதுதான் சிம்பொனி ஆர்கெ°ட்ராவா? எவ்வளவு அருமையாக இருக்கிறது இதில் மாணிக்கவாசகர் பாடலைப் பாடினால் எவ்வளவு நன்றாக இருக்கும். இதற்கு எந்தப் பாட்டு சரியாக வரும்? முத்திநெறி அறியாத மூர்க்கரோடு முயல்வேனா என்று சொல்லிவிட்டு, இது வார்த்தை பிரிக்க பிரிக்க வருகிறதே இதற்கு என்ன டியூன் போடுவது? என்று சொல்லியவாறு

‘புற்றில்வாள் அரவும் அஞ்சேன்
பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்’


என்ற அந்த பாட்டைப் போட்டுவிட்டு, கடைசியாக ‘வாதவூர் அடிகள் வாழ்க வாழ்த்துரைக்கும் அடியார் வாழ்க என முடிக்கிறார்.

இங்கே அற்புதமாகப் பாடிய கல்லூரி நங்கைகள் அதைப் பாடலில் சேர்த்து இருந்தார்கள். வாதவூர் அடிகள் திருவாசகத்தின் மூலமாகத் தமிழ் இருக்கும் வரை வாழ்வார் - எங்கள் இளையராஜா இந்த இசைப் படைப்பால் வாழ்வார் - தமிழகம் அவருக்கு நன்றிக் கடன் பட்டு இருக்கிறது.

இயற்கைத் தாய் உங்களுக்கு நூறு ஆண்டுகளுக்கு மேலும் வாழுகின்ற ஆற்றலையும், ஆரோக்கியத்தையும் கொடுத்து, இந்தத் தமிழகத்துக்கும், தமிழ் இசைக்கும் நீங்கள் பெரும் சேவை செய்ய வேண்டும் என்று சொல்லி, எளியேனாகிய எனக்கு இந்த அருமையான வாய்ப்பைத் தந்த உங்களுக்கு எந்நாளும் மறவாத நன்றி.

வைகோ இவ்வாறு உரை யாற்றினார்.

No comments: