Saturday, August 4, 2007

டாடாவின் டைட்டானியம் டை ஆக்சைடு தொழிற்சாலைக்கு தமிழக அரசு மக்களின் நிலங்களை கையகப்படுத்துவது ‘‘சட்டத்துக்குப் புறம்பானது...’’

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் டைட்டானியம் டை ஆக்ஸைடு தொழிற்சாலை அமைப்பதற்கு தமிழக அரசும் டாடா நிறுவனமும் ஜூன் 28-ம் தேதி ஒப்பந்தம் செய்துள்ளன. இங்குள்ள இயற்கைக் கனிமப் பொருளைப் பயன்படுத்தித் தொழிற்சாலை அமைப்பதற்கு டாடா நிறுவனத்திற்குத் தேவையான நாசரேத், திசையன்விளை, கூத்தன்குழி, தேரிக்காடு பகுதிகளில் உள்ள நிலங்களைக் கையகப்படுத்தி ஒப்படைக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரமாக இறங்கியது. இவ்வாறு தமிழக அரசு நிலங்களை ஆர்ஜிதம் செய்வதற்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இத்தகைய நடவடிக்கையால் தமிழகத்தின் தென்பகுதியில் ஒரு நந்திகிராம் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் பல கட்சிகளும் தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கையைக் கண்டித்துள்ளன. இதன் காரணமாக தமிழக அரசு தற்காலிகமாக இதை ஒத்தி வைத்துள்ளது. மேலும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவை அந்த பகுதிக்கு அனுப்பி அந்த குழுவின் அறிவுறைப்படி மேற்கொண்டு நடவடிக்கக எடுக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். திமுகவின் அமைச்சர்களும் அதிகாரிகளும் கொண்ட குழு அவர்களுக்கு சாதகமாக ஒருதலைபட்சமாகவே கருத்தை தெரிவிக்கக்கூடும். இதிலிருந்து அந்த பகுதி மக்களுக்கு நியாயம் கிடைத்துவிடும் என்று நாம் எண்ண முடியாது. இதை நடுநிலையோடு ஒரு குழு ஆராய்ந்தால்தான் சரியான முடிவெடுக்க முடியும்.
இந்நிலையில் இந்த வாரம் (08.08.2007) ஜூனியர் விகடன் இதழில் 'சவுத் ஏஷியன் ஹியூமன் ரைட்ஸ் ஃபோரம்' என்ற அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளிட்டுள்ளது. அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள நான் விரும்புகிறேன்.
‘‘சட்டத்துக்குப் புறம்பானது...’’ (08.08.2007 ஜூனியர் விகடன் இதழிலிருந்து...)
'டாடா’வின் டைட்டானியம் ஆலை துவங்கும் முன், அந்தப் பகுதி மக்களைச் சந்தித்து அவர்கள் கருத்தையும் கேட்கப் போவதாகவும், மக்களின் சம்மதம் மற்றும் ஒத்துழைப்போடும்தான் இந்தத் திட்டம் துவங்கப்படும் என்றும் முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறார். ஏற்கெனவே, சரத்குமார் அனுப்பிய ஒரு குழு மக்களைச் சந்தித்து, அவர் கள் தந்த கருத்துக்களை வெளியிட்டிருக்கிறது. சரத்குமார் குழுவைப் போலவே, மக்களைச் சந்தித்த இன்னொரு குழுவும் உண்டு.

மனித உரிமைகள் பாதிக்கப்படும்போதும், சமூகவியல் ரீதியான பிரச்னைகள் தலைதூக்கும்போதும் நேரடியாக மக்களைச் சந்தித்து அவர்களின் கருத்துகளை உரியவர்களின் கவனத்துக்குக் கொண்டுபோய் போராடும் 'சவுத் ஏஷியன் ஹியூமன் ரைட்ஸ் ஃபோரம்' என்ற அமைப்புதான் அது. இந்தியா, பாகிஸ்தான், மலேஷியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து போன்ற தெற்காசிய நாடுகளில் பல பிரச்னைகளை ஆராய்ந்து தன் ரிப்போர்ட்டைக் கொடுத்திருக்கிறது இந்தக் குழு.

ம.தி.மு.க&வின் செய்தித் தொடர்பாளரான வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஏ.எம்.முகர்ஜி என்ற மனித உரிமை ஆர்வலர் மற்றும் டட் என்ற பேராசிரியர் அடங்கிய மூவர் குழு இந்த 'சவுத் ஏஷியன் ஹியூமன் ரைட்ஸ் ஃபோரம்' சார்பாக சாத்தான்குளம் மற்றும் ராதாபுரம் பகுதிகளுக்குச் சென்று மக்களிடம் விரிவாகப் பேசிவிட்டுத் திரும்பியது. 'டாடா' ஆலை திட்டம் இப்போதைக்கு ஒத்திப் போடப்படுவதாக முதல்வரிடமிருந்து அறிவிப்பு வருவதற்கு முன்பே, இந்தக் குழு தனது ரிப்போர்ட்டை சிங்கப்பூரில் உள்ள தனது தலைமையகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.
அந்த ரிப்போர்ட்டின் முக்கிய பகுதிகள் கவனிக்கத் தகுந்தவை -

மருத்துவமனை, பேருந்து நிலையம் போன்ற பொது மக்களின் நேரடியான நலன் சார்ந்த விஷயங்களுக்காக வேண்டுமானால் நிலங்களை அரசாங்கம் ஆர்ஜிதம் செய்யலாம் என்று சட்டம் கூறுகிறது. இதன்படி பார்த்தால், மேற்கு வங்காளம் நந்திகிராமத்தில் இதே ÔடாடாÕ நிறுவனத் துக்காக அம்மாநில அரசு நில ஆர்ஜிதம் செய்தது சட்டப் படி தவறான ஒன்று. தமிழக அரசும் இதே பாணியில் Ôடைட்டானியம்Õ ஆலைக்காகப் பல ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஆர்ஜிதம் செய்து கொடுக்கப் போவதாகக்கூறுவது சட்டத்துக்குப் புறம்பானது!

சுற்றுச்சூழல், வீட்டு வசதி மற்றும் தனியார் ஆலைகள் தொடர்பான விஷயங்களை அமல்படுத்தும்போது, கிராம பஞ்சாயத்துகளின் ஆளுகையின் கீழ் உள்ள நிலங்களைப் பயன்படுத்த நினைத்தால்... அது குறித்து முடிவெடுக்கும் 'சுப்ரீம் பவர்' அந்தந்தக் கிராம சபைகளுக்கே உண்டு.

ஆனால், 'டைட்டானியம்' ஆலை விஷயத்தில் இந்தப் பஞ்சாயத்துகளின் ஒருமித்த ஆதரவைத் தமிழக அரசு எப்படி பெறமுடியும் என்று தெரியவில்லை. காரணம், அ.தி.மு.க., ம.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் என்று பல்வேறு கட்சிகளின் கீழ் இங்குள்ள வெவ்வேறு பஞ்சாயத்துகளும் வருகின்றன. இந்த ஆலை விஷயத்தில் மாறுபட்ட கருத்துக் கொண்டிருக்கும் இந்தக் கட்சிகள் ஒரேவிதமான முடிவை எடுத்து சம்மதம் தர வாய்ப்பே இல்லை. அதையும் மீறி ஆலை தொடங்கினால் சட்டரீதியான சிக்கலுக்கே வழி வகுக்கும்.

டைட்டானியம் டை ஆக்ஸைடுக்கான கனிமம், பூமியில் பத்து மீட்டருக்குக் கீழே தோண்டிய பிறகுதான் கிடைக்கும். அப்படித் தோண்டும்போது, அருகிலேயே கடல் இருப்பதால் நிலத்தடி நீர் உப்புநீராக மாறுவதற்கான அபாயம் இருக்கிறது. பனை, முந்திரி, வாழை, தென்னை, புளி, முருங்கை, பேப்பருக்கான மரம் ஆகியவற்றை பெருவாரியாக விளைவித்துவரும் மக்கள் ஒரேயடியாகப் பாதிக்கப்படுவார்கள்.

இந்த வட்டாரத்தில் பல கிராமங்களில் ஏராளமான கிறிஸ்தவ மதத்து மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கான அடக்கம் செய்யுமிடங்களும் உள்ளன. அந்தக் கல்லறைகளெல்லாம் தொழிற்சாலை வரும்போது அடிபடும். வருடந்தோறும் முன்னோர்களுக்கு கிறிஸ்தவர்கள் நடத்தும் Ôகல்லறைத் திருவிழாÕவுக்கும் வழியில்லாமல் போகும். இதை அந்த மக்கள் தங்கள் சென்டிமென்ட்டுக்கு விழும் மிகப் பெரிய அடியாகவே நினைக்கிறார்கள்.

வேலை தருவதாக 'டாடா' சொல்வதை இப்பகுதி மக்கள் நம்ப மறுக்கிறார்கள். ஏற்கெனவே, கூடங்குளம், மகேந்திர கிரி திட்டங்களுக்கு நிலம் கொடுத்தவர்களின் கசப்பான அனுபவங்களே இதற்குக் காரணம். கழிப்பறை சுத்தம் செய்வது, பெருக்குவது, பியூன் போன்ற அடிமட்ட வேலைகளை மட்டும் தங்களுக்குத் தந்துவிட்டு, ஊதியம் அதிகமான வேலைகளுக்கு வட இந்திய ஆட்களைக் கொண்டுவந்து அமர்த்துவதை இம்மக்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

'டேனிடா' திட்டத்தின் மூலம் இந்த சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமாக செலவு செய்து மரக்கன்றுகளை அரசாங்கமே நட்டுள்ளது. அந்த மரங்களை எல்லாம் ஆலையைக் காரணம் காட்டி வெட்டுவது, இதுவரை எடுத்த முயற்சிகளைப் பாழாக்குவதோடு சுற்றுச்சூழலையும் பாதிக்கும் என்றெல்லாம் இந்த ரிப்போர்ட் கூறுகிறது.

No comments: