Saturday, August 4, 2007

நிலங்களுக்கான பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பு உயர்வை ரத்து செய்யவேண்டும்: வைகோ வேண்டுகோள்

சென்னை, ஆகஸ்ட் 5-: நிலங்களுக்கான பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பு உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு, வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பைப் பல மடங்கு உயர்த்தி, கடந்த 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக அரசு அறிவித்து உள்ளது. திடீரென்று, வழிகாட்டி மதிப்பை அரசு உயர்த்தி உள்ள நடவடிக்கை, நடுத்தர மக்களை மாத வருவாயை நம்பி வாழும் மக்களை, சிறு விவசாயிகளைக் கடுமையாகப் பாதிக்கும்.

நில விற்பனையில் முத்திரைத்தாள் கட்டணம் மூலம் அரசுக்கு அதிக வருமானம் கிடைக்கும் என்பதன் மூலம் இந்த நடவடிக்கையை நியாயப்படுத்த இயலாது. வசதி குறைந்தோர், நடுத்தர மக்கள், சிறு விவசாயிகள் காலி இடங்களையும், நிலங்களையும் விற்கவோ, வாங்கவோ இயலாத வகையில், மூன்று மடங்கு, நான்கு மடங்கு பத்திரப் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால், அதற்கு உரிய பொருளாதார வசதி இன்றி, பத்திரப் பதிவு செய்ய முடியாது. பணமுடையின் காரணமாக, நிலங்களை, இடங்களை விற்றாலும் அல்லது குடும்பங்களுக்கு உள்ளே பாகப்பிரிவினை செய்தாலும், பத்திரப்பதிவு செய்து கொள்ளாமல், வெறும் உடன்படிக்கையாகவே அப்பரிமாற்றங்கள் அமையும்.

இதனால், அதே இடங்களை, நிலங்களை, பெரும் பணம் கொண்டோர் விலைக்கு வாங்கவும், அதன் விளைவாகப் பிரச்சினைகளும், பல்வேறு இன்னல்களும் ஏற்படும். நிலத்தினுடைய மதிப்பை உயர்த்துகிற கட்டுமான வசதிகள் எவற்றையும் அரசாங்கம் அப்பகுதிகளில் செய்து கொடுக்காமல், வழிகாட்டி மதிப்பைக் கூட்டி இருப்பது, நடுத்தர மக்கள் நலனைப் பாதிக்கின்ற மிகத் தவறான நடவடிக்கை ஆகும். ஒட்டுமொத்தமாக இதனால் பத்திரப்பதிவும் பாதிக்கப்படுவதுடன், அதனை நம்பி வாழும் ஊழியர்களும் அவதிக்கு ஆளாவார்கள். இதனை தமிழக அரசு மறுபரிசீலனை செய்து, வழிகாட்டி மதிப்பு உயர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments: