Saturday, December 29, 2007

வைகோ எடைக்கு இரு மடங்கு எடை வெள்ளி கட்டி பரிசு


சென்னை: "புத்தாண்டில், பார்லிமென்ட் தேர்தல் வரும்,'' என்று ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேசினார்.

வைகோவின் நாற்பது ஆண்டு கால பொது வாழ்க்கையை பாராட்டிஅவருக்கு எடைக்கு இரு மடங்கு எடை வெள்ளிக் கட்டிகள் வழங்கும் விழா பொதுக் கூட்டம் தென் சென்னை ம.தி.மு.க., சார்பில் வேளச்சேரியில் நடந்தது. மாவட்டச் செயலர் மணிமாறன் தலைமை வகித்தார். மேடையில் வைக்கப்பட்டிருந்த பெரிய தராசில் வைகோ உட்கார வைக்கப்பட்டார். இன்னொரு தட்டில் அவரது எடைக்கு இரு மடங்கு வெள்ளிக் கட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டன. வைகோ 25 முறை சிறை சென்றதை நினைவு கூறும் வகையில் அவருக்கு 25 சவரன் தங்க சங்கிலியும் அணிவிக்கப்பட்டது. கூட்டத்தில், வைகோ பேசியதாவது:

எனக்கு வெள்ளி, தங்கம் தரும் விழாவில் பங்கேற்க மறுத்தேன். ஆனால், மணிமாறன் போன்ற தம்பிகள் மனம் புண்படக் கூடாது என்பதற்காக ஒப்புக் கொண்டேன். இங்கே பேசியவர்கள் எனக்கு எடைக்கு எடை தங்கம், கோமேகம் தருவதாக சொன்னார்கள். அதையெல்லாம் நான் விரும்புவதில்லை. நான் தங்கத்தை அணிவதில்லை. எனது பொது வாழ்க்கையை பாராட்டி தராசில் உட்கார வைத்தீர்கள். என்னை பொருத்தவரை உங்கள் இதயத்தில் நான் அமர்ந்ததாக கருதுகிறேன். உங்களுக்கு என் உயிர் உள்ள வரை அன்பும் பாசமும், உழைப்பும் மட்டும் தான் தரமுடியும். இப்போது, பதவிகள் உங்களுக்கு தரமுடியாமல் இருக்கலாம். காலம் கருணை காட்டும். நமக்கும் காலம் வரும். உங்களுக்கு கிடைக்க வேண்டியதெல்லாம் கிடைக்கும். தமிழர்களின் நலம் காக்கும் கொள்கையிலும், நீதி நிலைநாட்டுவதிலும் நாம் உறுதியாக இருக்கிறோம். கடந்த 13 ஆண்டுகளாக பல துன்பம், துயரத்தை கடந்து வந்து விட்டோம். பதவிகள் நிரந்தரமான புகழை தராது. தியாகம் மட்டும் நிரந்தரமான புகழை தரும். புத்தாண்டில் நிச்சயம் தேர்தல் வரும். அதில் தி.மு.க., ஆட்சி துõக்கி எறியப்படும். இவ்வாறு வைகோ பேசினார்.

தலைமை நிலையச் செயலர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், துணைப்பொதுச்செயலர் மல்லை சத்யா, கொள்கை பரப்பு செயலர் நாஞ்சில் சம்பத், பகுதி செயலர் சு.செல்வபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏழை பெண்களுக்கு ஐந்து கிலோ அரிசி பைகள், 500 பெண்களுக்கு இலவச புடவைகள், பத்து ஊனமுற்றோருக்கு சைக்கிள்கள், இஸ்திரி பெட்டிகள், தையல் மிஷின்கள் ஆகியவற்றை வைகோ வழங்கினார்.

திருப்பூரில் ஆக்கிரமிப்பு அகற்ற மதிமுக கவுன்சிலர்கள் கோரிக்கை

கோவை, டிச. 28: திருப்பூர் நகரில் போக்குவரத்து நெரிசலைப் போக்க நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக கவுன்சிலர்கள் கோரியுள்ளனர்.

முதல்வர் கருணாநிதிக்கு கவுன்சிலர்கள் சிவபாலன், தம்பி கோவிந்தராஜ், சாந்தாமணி, கலாமணி சுந்தரம், பரமேஸ்வரி சண்முகம் ஆகியோர் கடிதம் அனுப்பியுள்ளனர். கடிதத்தின் நகலை நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் முபெ சாமிநாதன், ஆட்சியர் நீரஜ் மித்தல் ஆகியோருக்கும் அனுப்பியுள்ளதாக சிவபாலன் தெரிவித்தார்.

திருப்பூர் நகரில் அனைத்துப் பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் விபத்துகளைத் தவிர்க்கவும் சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கடிதத்தில் கோரியுள்ளனர்.

விரைவில் தேர்தல் நடைபெறும்: வைகோ பேச்சு

சென்னை, டிச.29-: மத்தியிலும், மாநிலத்திலும் விரைவில் தேர்தல் வரும் என்று வைகோ கூறினார்.

தென்சென்னை மாவட்ட ம.தி.மு.க. சார்பில் ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோவின் 40 ஆண்டுகால பொதுவாழ்க்கையை பாராட்டி அவருடைய எடைக்கு இருமடங்கு வெள்ளிக்கட்டிகள் பரிசளிக்கும் விழா வேளச்சேரியில் நடைபெற்றது. நலத்திட்ட உதவிகளை வழங்கி வைகோ பேசியதாவது:-

ம.தி.மு.க. தமிழக அரசியலில் இருந்து அழிக்க முடியாதது என்று நிரூபிக்கும் வகையில் இந்த விழா நடக்கிறது. இந்த தங்கசங்கிலியும், வெள்ளிக்கட்டிகளும் ம.தி.மு.க. நிதிக்கணக்கில் வைக்கப்படும். கட்சி தொண்டர்களின் இந்த உழைப்புக்கு என் ஜீவன் இருக்கும் வரை என்னுடைய உழைப்பு, பாசம், அன்பை தருகிறேன்.

தமிழகத்தில் இருக்கும் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதா? ஒரு பக்கம் முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை அச்சுறுத்துகிறது. அதற்கு தீர்வு உண்டா? அந்த பிரச்சினையில் கருணாநிதி தமிழக மக்களை ஏமாற்றி வருகிறார். பாலாறு, காவிரி பிரச்சினையிலும் தமிழர்களின் உரிமையை காவுகொடுத்து விட்டார்.
அறிவிக்கப்படாத மின்வெட்டால் விவசாயிகள், மாணவர்கள் என்று அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகிறார்கள்.

இலங்கையில் ஒவ்வொரு நாளும் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். செஞ்சோலை என்ற இடத்தில் 61 குழந்தைகள் துடிக்க, துடிக்க இலங்கை விமானப்படையின் குண்டு வீச்சில் படுகொலை செய்யப்பட்டார்கள். அதற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவிக்காதது ஏன்?
இந்த கொடுமைகளுக்கு பிறகும் இலங்கையுடன் ராணுவ ஒப்பந்தம் செய்யாதீர்கள் என்று சொன்னோம். ஆனால் கையெழுத்து போடாமலேயே ராணுவ உதவிகளை, ரேடார் கருவிகளை வழங்கி இருக்கிறார்கள்.

இந்திய கடற்படை தளபதி, தமிழக மீனவர்களை இலங்கை கப்பற்படையினர் தாக்கியதே கிடையாது என்று கூறியிருக்கிறார். ஆனால் ஆயிரம் தடவை துப்பாக்கி சூடு நடத்தியிருக்கிறார்கள். இந்திய கடற்படை, இலங்கை கடற்படைக்கு வேவு பார்க்கிறது. ஐ.நா சபையின் அலுவலகத்தை இலங்கையில் திறக்க வேண்டும் என்ற தீர்மானத்துக்கு எதிராக இந்தியா வாக்களித்திருப்பது வெட்கக்கேடான விஷயம்.

தற்போது நடந்து கொண்டிருக்கும் மக்கள் விரோத அரசை எதிர்த்து களத்தில் நிற்க வேண்டும். இந்த இருள் விலக வேண்டும். 2008 கோடை மாதத்தை மத்திய அரசு தாண்டாது. கூட்டணிக்குள்ளும் குத்துவெட்டு தொடங்கி விட்டது. இந்த அரசுகள் கவிழும். அ.தி.மு.க.வுடன் இணைந்து அடுத்த தேர்தலை சந்திக்க தயாராவோம்.
இவ்வாறு வைகோ பேசினார்.

Saturday, December 8, 2007

முல்லைப் பெரியாறு: மதுரையில் வைகோ உண்ணாவிரதம்

வெள்ளிக்கிழமை, டிசம்பர் 7, 2007

மதுரை: திமுக அரசு ஆடம்பர விழாக்களை நடத்தி மின்சாரத்தை கபளீகரம் செய்ய பார்க்கிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.


முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத கேரள அரசை கண்டித்தும், இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் இன்று மதிமுகப் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் 800க்கும் மேற்பட்ட மதிமுகவினர் மதுரை, தல்லாகுளத்தில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன் உண்ணாவிரத போராட்டம் இருந்தனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் நிறுவனரும், தலைவருமான டாக்டர் என். சேதுராமனும் கலந்து கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது,

தமிழகத்தில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மின்சார வெட்டு மக்களை வாட்டி எடுத்துக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகி வருகின்ற விவசாயிகளால் விவசாயம் செய்ய முடியவில்லை. தொழிற்சாலைகள் முடங்கி கிடக்கின்றன.

தொழிற்சாலைகள், ஜெனரேட்டர்கள் மூலம் இயங்க வேண்டியிருப்பதால் யூனிட்டுக்கு ரூ. 4.50 செலவிட வேண்டிய தொழிற்சாலைகள் ரூ.15 செலவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக மாணவ-மாணவிகள் இரவு நேரங்களில் படிக்க முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.

மின்சார நிலையங்கள் பராமரிப்பு இல்லாமல் இருப்பதை 3 மாதங்களுக்கு முன்னரே அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா எடுத்துக் கூறி தமிழகத்தில் மின் பற்றாக்குறை இருப்பதை சுட்டிக் காட்டினார். அப்போது தமிழகத்தில் மின்வெட்டே கிடையாது என்று ஆற்காடு வீராசாமி ஓங்கி கூறினார்.

மக்களின் நம்பிக்கையை இழந்துவரும் திமுக அரசு ஆடம்பர விழாக்களை நடத்தி இன்னமும் மக்கள் செல்வாக்கு இருப்பதாக காட்டிக் கொள்ள முயற்சி செய்கிறது. ஆடம்பர விழாக்கள் மூலம் மின்சாரத்தை கபளீகரம் செய்ய பார்க்கிறது.

டை அமோனியம் பாஸ்பேட் போன்ற உரங்களின் விலை அதிகமாகி கள்ள சந்தையில் விற்கப்படுகிறது. இந்த உரங்களை விவசாயிகள் வாங்க முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

மின்வெட்டை கண்டித்தும், விவசாயிகள் நெல்விலை குவிண்டாலுக்கு (100 கிலோ) ரூ.1,000 வழங்கக் கோரியும், உர விலையை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்தும் மதிமுக மிகப்பெரிய போராட்டம் நடத்த இருக்கிறது. இன்னும் ஓரிரு நாட்களில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்றார் வைகோ.

http://thatstamil.oneindia.in/news/2007/12/07/tn-power-wastage-for-dmk-functions-vaiko.html