Sunday, August 19, 2007

இலக்கியங்களில் மனித உரிமைகள்: வைகோ

நண்பர்களே! ‘இலக்கியங்களில் மனித உரிமைகள்’ எனும் தலைப்பில் பொள்ளாச்சி நல்லமுத்துக் கவுண்டர்-மகாலிங்கம் கல்லூரியில் ஆற்றிய உரை பற்றி சங்கொலி 24.08.2007 இதழில் வைகோ எழுதிய கடிதத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

வைகோவின் கடிதத்திலிருந்து.....
இமைப்பொழுதும் நீங்காது என் இதயத்துடிப்போடும் இரத்தச் சுழற்சியோடும் கலந்துவிட்ட கண்ணின் மணிகளே!

‘இலக்கியங்களில் மனித உரிமைகள்’ எனும் தலைப்பில் நான் உரை ஆற்ற வேண்டும் என பொள்ளாச்சி நல்லமுத்துக் கவுண்டர்-மகாலிங்கம் கல்லூரி முதல்வர் முனைவர் என்.ராஜகுமார் அழைப்பு விடுத்து இருந்தார். ‘நடை பயிலும் முன்பே கொடை பயிலும் கொங்கு நாடு’ என்ற பெருமைக்கு உரிய அப்பகுதியின் சீர்மிகு நல்லமுத்துக் கவுண்டர்அவர்களும், அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்களின் தந்தையார் திரு.நாச்சிமுத்துக் கவுண்டர் அவர்களின் அருந்துணையுடன், 1957 இல் தொடங்கிய இக்கல்லூரியின் பொன்விழாவின் நுழைவாயில்நிகழ்வாகக் கல்லூரித்தமிழ்த் துறையினர் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிதான் நான் பங்கு ஏற்றதாகும்.

ஆகஸ்ட் 7 ஆம் நாள் அன்று, காலையில் கோவை சென்ற நான், கோவை மருத்துவ மையம் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு ஓய்வு எடுத்து வருகின்ற கழகப் பொருளாளர் ஆருயிர் அண்ணன் கண்ணப்பன் அவர்களைச் சந்தித்து அளவளாவிவிட்டு, பொள்ளாச்சி சென்றேன்

இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவமாணவியர் பயிலும் இக்கல்லூரியில், அன்பு காட்டி ஆர்வத்துடன் கல்லூரிச் செயலர் எஸ்.கே.கல்யாணசுந்தரம் அவர்களும், முதல்வர் என்.ராஜகுமார் அவர்களும், பேராசிரியர்களும் என்னை வரவேற்க, நிகழ்ச்சி சரியாக பிற்பகல் மூன்று மணிக்குத் தொடங்கியது. சிந்தனைக்குக் கிளர்ச்சி ஊட்டும் தலைப்பு. உண்ண உணவும், உடுக்க உடையும், உறைவதற்கு இடமும், அடிப்படை உரிமைகளாக உத்தரவாதம் ஆக்கப்பட வேண்டும் என்பதற்கு, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அடிப்படைக் கோட்பாடு அமைத்தவன் தமிழன். அதனால்தான்,
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகு இயற்றியான்
என மிக அழுத்தமாகச் சொன்ன திருவள்ளுவரைச் சுட்டிக்காட்டி, காணார், கேளார், கால் முடமானோர், பேணா மாக்கள், பேசார், பிணித்தோர், பசி நோய் உற்றோர் அனைவரும் வருக’ என, துன்புறும் மக்களுக்கு அருமருந்தாக அட்சயபாத்திரம் ஏந்திய மணிமேகலையை நினைவூட்டி, மணிமுடிவேந்தனை நோக்கி, ‘தேரா மன்னா’ என எரிமலையாய்ச் சீறி நீதி கேட்ட தென்தமிழ்ப் பாவை கண்ணகியின் புகழ் விளித்து, ‘நமனையும் அஞ்சேன்’ என்ற நாவுக்கரசரின் உரிமை முழக்கத்தை, எடுத்து இயம்பினேன்.

மனித உரிமைகளை நிலைநாட்ட எழுந்தவைதான், வரலாற்றின் மைல் கற்களான புரட்சிகள். ஒவ்வொரு புரட்சிக்கும், அந்த எரிமலையின் நெருப்புக் கர்ப்பத்தில் கனன்றவை இலக்கியங்கள்தாம்.

பிரெஞ்சுப் புரட்சி 1789:
கிரேக்கத்தில் சிந்தனைப் புரட்சியைத் தொடுத்தசாக்ரடீசின் வாழ்க்கையை அரியதோர் நாடகம் ஆக்கினான் வால்டேர்.

‘மனிதன் சுதந்திரமாகவே பிறக்கிறான். ஆனால், எங்கும் அவன் விலங்கு பூட்டப்பட்டுக் கிடக்கிறான்’ என்ற ரூசோவும், வால்டேரும் தீட்டிய இலக்கியங்களான கதைகளில், நாடகங்களில் மனித உரிமைகளை நிலைநாட்ட ஊட்டப்பட்ட உணர்ச்சியைப் பட்டியல் இட்டேன். அந்தப் பிரெஞ்சுப் புரட்சியை ஓர் சரித்திர நாவல் இலக்கியமாகத் தந்தவன், இங்கிலாந்தின் கார்லைல்.

முதல் மனித உரிமைப் பிரகடனம் 1812:

அடக்குமுறைக்கு ஆளாகி, இரத்தம் சிந்தி உயிர்ப்பலியான, தொழிலாளர்களுக்காக, ஆவேசம்கொண்டு கவிஞன் ஷெல்லி தீட்டிய நெருப்புக்கவிதைதான் ‘அராஜகத்தின் முகமூடி’ (Mask of anarchy). நீங்கள் விதைக்கிறீர்கள்; எவனோ அறுக்கிறான், நீங்கள் செல்வத்தைத் தேடுகிறீர்கள்; எவனோ குவிக்கிறான், நீங்கள் நெய்கிறீர்கள்; எவனோ அணிகிறான். நீங்கள் வார்ப்பிக்கிறீர்கள்; அந்த ஆயுதங்களை எவனோ ஏந்துகிறான்.

இனிமேல், நீங்கள் விதையுங்கள்; எந்தக் கொடுங்கோலனையும் அறுக்க விடாதீர்கள். செல்வத்தைத் தேடுங்கள்; எந்த ஏமாற்றுக்காரனையும் குவிக்கவிடாதீர்கள், ஆடைகளை நெய்யுங்கள்; எந்தச் சோம்பேறியையும் உடுத்த விடாதீர்கள்.ஆயுதங்களை வார்ப்பியுங்கள்; நீங்களே ஏந்துவதற்காக! கவிஞன் ஷெல்லி, 1812 இல் எழுதியதுதான் ‘மனித உரிமைப் பிரகடனம்’ நீட்டியவாள் முனைக்கு அஞ்சி, மன்னன் ஜான் கையெழுத்து இட்ட மேக்னா கார்ட்டா (Magna Carta) மனித உரிமைச் சாசனம் வெளிவருவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே உதித்ததுதான் ஷெல்லியின் பிரகடனம். அப்பிரகடனத்தை எழுதியதாள்கள், பாட்டில்களில் அடைக்கப்பட்டு, நீரோடைகளிலும், நதிகளிலும் வீசப்பட்டன. பலூன்களில் கட்டி அனுப்பப்பட்டன. இதன் அடிப்படையில் வெளியான பிரகடனம்தான், 1948 டிசம்பர் ஐ.நா. சபையின் மனித உரிமைப் பிரகடனம்.

ஷெல்லியின் பிரகடனத்தின் உட்பிரிவுகள் 31. ஐ.நா. பிரகடனத்தின் உட்பிரிவுகள் 30. இக்கவிஞனின்குரல் பட்டுத் தெறித்த இன்னொரு பிரகடனம்தான், மார்க்சும், எங்கெல்சும், 1848 இல் வெளியிட்ட ‘கம்யூனிஸ்ட் மேனிஃபெஸ்டோ’. ‘உலகத்தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள். நீங்கள் இழக்கப் போவது எதுவும் இல்லை, விலங்குகளைத் தவிர’ என்று எழுந்தது அந்த முழக்கம்.

அமெரிக்க உள்நாட்டு யுத்தம் அமெரிக்க நாட்டில், அடிமை காரிருளில் தவித்த கருப்பு இன நீக்ரோக்கள், மிருகங்களைவிட மோசமாக நடத்தப்பட்ட காலம் அது. சகிக்கவே முடியாத இக்கொடுமையைக் கண்டு மனம் குமுறிய பெண்மணிதான் உலகப் பிரசித்திபெற்ற,
Uncle Tom’s Cabin எனும் அற்புதமான கண்ணீர்க்காவியம் தீட்டிய ‘ஹேரியட் பீச்சர் ஸ்டோவ்’ இந்த நூலை எழுதிய ஆண்டு 1852. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு 1862 இல், அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன், இந்த மனித உரிமை இலக்கியப்படைப்பாளியைப் பார்த்து, ‘நீங்கள்தானா அந்தப்பெண்மணி? இப்பொழுது நடக்கின்ற அமெரிக்க உள்நாட்டுப் போரே உங்களால்தானே’ என்றாராம். ஆச்சரியப்பட வைக்கும் இன்னொரு செய்தி என்னதெரியுமா? அமெரிக்காவின் தெற்கு மாநிலங்களில் தடை செய்யப்பட்ட இந்தப் புத்தகம், இங்கிலாந்துநாட்டில் அதிகப் பிரதிகள் விற்பனையான இந்தப் புத்தகம், இதைப்படிக்க நேர்ந்த வாசகர்களின் கண்களை அருவியாக ஆக்கிய இந்தப் புத்தகம், ‘நீக்ரோக்களின் அடிமை விலங்கை உடைப்பேன்’ என ஆபிரகாம் லிங்கன் சபதம் செய்யக் காரணமான இந்தப் புத்தகம், வழக்கமான எழுத்தாளர்கள் எழுதும் முறையில், முதல் அத்தியாயத்தில் தொடங்கி எழுதப்படவில்லை. இந்தப் புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தைத்தான் ஹேரியட் அம்மையார் முதன் முதலில் எழுதினார். எழுதிவிட்டுத் தன்பிள்ளைகளிடம் வாசித்துக் காண்பித்தார். அதைக் கேட்டுப் பிள்ளைகள் கண்ணீர் விட்டு அழுதார்கள்.


ருஷ்யப் புரட்சி:
மாமேதை லெனினை மிகவும் கவர்ந்தது, ‘26 பேரும்அந்த இள நங்கையும்’ என்ற மாக்சிம் கார்க்கியின் நூல் ஆகும் என்று லெனினின் துணைவியார் குருப்ஸ்காயா குறிப்பிட்டு உள்ளார். ஈர நிலவறையில் நோயாலும் பசியாலும் வாடி வதங்கிய 26தொழிலாளர்களின் அவலத்தில் பங்கு ஏற்ற 16 வயது நங்கை தானியா கதைதான் அது. ருஷ்யப் புரட்சிக்குக் கருவாக அமைந்த இலக்கியங்களை விவரித்தேன்.

சீனப்புரட்சி:

‘நூறு பூக்கள் மலரட்டும், நூறு சிந்தனைகள் முகிழ்க்கட்டும்’ என்ற கவிஞன் மாவோ, நடத்திய சீனப் புரட்சிக்குத் துணை நின்ற படைப்புகளைச் சுட்டிக்காட்டிய நான், நிகழ்கால அதிசயமாய் இன்னும் தலை தாழாமல் கம்பீரக் குரல் கொடுக்கும் ஃபிடல்காஸ்ட்ரோவின் மனம் கவர்ந்த இலக்கியங்களைச் சொன்னேன். அமெரிக்க ஏகாதிபத்தியக் கழுகை விரட்டிய வியட்நாம் விடுதலை வேந்தன், ஹோ-சிமின் காலத்துப் படைப்புகளைச் சொன்ன நான், மனித உரிமைகளுக்காக 27 ஆண்டுகள் ரோபென் தீவுச் சிறையில் வாடிய நெல்சன் மாண்டேலாவுக்கு உணர்ச்சி ஊட்டிய நூல்தான் ரஸ்கின் எழுதிய ‘Unto this last’ (கடையனின் கடைத்தேற்றம்) என்பதைக் கூறியதற்குக் காரணமே, இதே புத்தகம்தான் என்வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியது என்று, 1942 இல் அண்ணல் காந்தியார் கூறியது, சிந்தனைக்கு விருந்து அன்றோ?
ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்ட இந்தியாவில், வடபுலத்தில் எழுந்த இலக்கியங்களில், நாவல் ஆசிரியர் பிரேம்சந்தின் ‘ரங்கபூமி’யைக் குறிப்பிட்டேன். ஏழை, எளியோரின், சிறிது அளவுநிலங்களையும், பண முதலைகள் கபளீகரம் செய்வதும், நிராதரவாக ஆக்கப்பட்ட அந்த ஏழைகள் செத்து மடிவதும் இன்றுவரை நீடிக்கிறதே, அதனைத்தான் பிரேம்சந்த் படம்பிடித்து உள்ளார்.
எங்கே அச்சம் என்பது இல்லையோ, எங்கே அறிவுதலை நிமிர்ந்து நிற்கிறதோ, அந்த சுதந்திரத்தின் சொர்க்கத்தில் என் தாயகம் விழித்து எழட்டும் எனும் உயிர்க் கவிதைகளைத் தந்த கவியரசர் தாகூரின் கவிதைகள், மராட்டிய எழுத்தாளர் காண்டேகரின் நாவல்கள், ‘பாகிஸ்தான்’ எனும் பிரிவினைக் குரல்எழுவதற்கு முன்னர், கவிஞன் அல்லாமா இக்பால் தீட்டிய கவிதைகள் என வரிசைப்படுத்திய நான், தென் ஆப்பிரிக்காவின் நிற வேற்றுமைக் கொடுமைபோல், அமெரிக்காவில் நீக்ரோக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிபோல், நம் நாட்டில், மனு தர்மத்தால், வருணாசிரமத்தால், வைதீகக் கொடுமையால் உருவாக்கப்பட்ட அக்கிரமமான அநீதியை எதிர்த்துப் போர்க்கோலம் பூண்ட திராவிட இயக்கத்தில், மனித உரிமைகளுக்காக அறிஞர் அண்ணா தீட்டிய எழுத்து ஓவியங்களைச் சொன்னேன்.
வாள் பிடித்துப் பகைக் கூட்டங்களை வென்ற மாவீரன் சிவாஜி, காகபட்டரின் தாள்பிடிக்கும் இழிநிலையா? என்ற கேள்வி எழுப்பிய அவரது ‘சந்திரமோகன்’ நாடகம் உள்ளிட்ட புரட்சி இலக்கியங்களைச் சொன்னேன். மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி உண்டோ? என்று குமுறிய பாரதியை, ‘கொலைவாளினை எடடா, மிகு கொடியோர் செயல்அறவே’ எனும் போர்க்குரல் எழுப்பிய பாவேந்தர் தந்தகவிதை இலக்கியங்களை என் உரையில் வைத்தேன்.
என் உரையின் உச்சகட்டமாக அமைந்ததுதான், தமிழ்ஈழத்தில் மனித உரிமைகளுக்காகத் தணலாக எழுந்த கவிதைகள் ஆகும். தமிழ் ஈழத்தில் உரிமை உள்ள மனிதர்களாக வாழ்வதற்காக மரண பூமியில் போராடும் தமிழ் மக்களின் உரிமைப்போரை விவரித்தது ஆகும். நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆயிரக்கணக்கில் திரண்டு இருந்த மாணவ, மாணவிகள் ஆரவாரம் செய்ததையும், கண்கலங்கியதையும் கண்டபோது, தமிழ் இனம்காக்கும் உணர்வு, நீறுபூத்த நெருப்பாக உள்ளது. இந்த நெருப்பை எந்தச் சக்தியாலும் அணைக்க முடியாது என்ற உறுதி எற்பட்டது.
நான் பேசி முடித்தவுடன், அந்த அரங்கத்தில் இருந்த மாணவ மாணவியரும் பேராசியர்களும், நிர்வாகிகளும் எழுந்து நின்று ஐந்து நிமிடம் கையொலி எழுப்பிப் பாராட்டியபோது, எனக்கே கூச்சம் ஏற்பட்டது.

No comments: