Monday, August 6, 2007

நந்திகிராமம் முதல் தூத்துக்குடி வரை...

உலகமயமாக்கல் வளரும் நாடுகளைச் சூறாவளியாகத்தாக்கிக் கொண்டு இருக்கிறது. அரசாங்கங்களையும், ஆளுகிறவர்களையும் ‘கைக்குள் போட்டுக் கொண்டு’ விசுவரூபம் எடுத்துவிட்டதாக பிரம்மாண்டத் திட்டங்களை அடுக்கும் அதே வேளையில், அதன் பகாசுர வேகத்தில் மிதியுண்டு கூழாகிப் போகிறார்கள் அடித்தட்டு மக்கள்.

பன்னாட்டு நிறுவனங்களுடன், உள்நாட்டின் பெருமுதலாளிகளும் முன்னிலும் வேகத்துடன் பணக்கிடங்குகளை நிரப்ப யத்தனிக்கும்போது, ஏழைபாழைகள் அவர்களின் ராட்சதக் கரங்களில் சிக்குண்டு மடிவது தொடர்ச்சியாக நிகழ்கிறது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (Special Economic Zones) என்ற பெயரில் ஏழை மக்களின் விவசாய நிலங்களும், குடியிருப்புப் பகுதிகளும் கபளீகரம் செய்யப்படுகின்றன. மறுபுறம் பெருமுதலாளிகளின் பேராசைத் திட்டங்களுக்கு கதவு திறந்துவிடும் அரசாங்கங்கள் உள்ளூர் மக்களை விரட்டியடிக்கிற முனைப்பில் நிற்கின்றன.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைக் குறித்து வாய்கிழியப் பேசும் இடதுசாரிகள் - உலகமயமாக்கலை எதிர்ப்பதாகத் தம்பட்டமடிக்கும் கம்யூனிஸ்ட்டுகள் - தாங்கள் ஆளும் மேற்கு வங்கத்தில் அப்பாவி மக்களின் வாழ்வு ஆதாரங்களை சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காகவும், பெருமுதலாளிகளின் கொள்ளை இலாபத் திட்டங்களுக்காவும் அடகு வைக்க முயன்றனர்.

டாடாவுக்காக சிங்கூர் கிராமத்தை ஆக்கிரமிக்க முற்பட்டது இடதுசாரி கூட்டணி அரசு. நந்திகிராமத்தில் நிலங்களைக் கையகப்படுத்துவதற்காக பழங்குடி மக்களை விரட்டியடித்து கொன்று குவித்தது. குடிசையில் இருந்து துப்பினால் கோபுரமே வீழும் அல்லவா? அடக்குமுறைக்கு அஞ்சாத ஏழை மக்கள்ஒன்று திரண்டு துப்பாக்கி முனைகளுக்கு எதிராக நெஞ்சை நிமிர்த்தினார்கள். இடதுசாரி அரசு பின்வாங்கிவிட்டது. ஆனால், காலம் கருதிக் காத்துக்கொண்டு இருக்கிறது...

கம்யூனிஸ்ட்டுகள் கூலி விவசாயிகளுக்கும், ஏழைமக்களுக்கும் இலவச நிலம் கோரி ஆந்திராவில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ‘இலவச நிலமா? ஏது?’ என்று கைவிரித்த அரசாங்கத்தின் முன்னால் இறைந்துகிடக்கும் நிலங்களைப் பட்டியலிட்டுக் காட்டினார்கள். ஆனால், ஆளும் காங்கிரஸ் அரசு மசியுமா? மறுத்து முரண்டு பிடித்தது. பொதுமக்களை ஒன்று திரண்டுப் போராட அழைப்பு விடுத்தார்கள் இடதுசாரிகள். காங்கிரஸ் அரசோ ஆயுதத்தைக் கையில் எடுத்தது. ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டத்தில் ஆறு அப்பாவிகள் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாகிப்போனார்கள்.

இந்தியாவை உலுக்கிய இந்த நிகழ்வால் ஆந்திர அரசாங்கம் தட்டுத் தடுமாறி விழித்துக் கொண்டிருக்கிறது. நாடு முழுவதிலும் இருந்து எழும் எதிர்ப்புக் கணைகளைத்தாள முடியாமல் தவிக்கிறது. மேற்கு வங்கத்தில் பலஉயிர்களைப் பலி கொண்ட கம்யூனிஸ்ட்டுகள் ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியால் பறிக்கப்பட்ட உயிர்களுக்காக நாடு முழுவதும் கிளர்ந்து கொண்டு இருக்கிறார்கள்...

அடுத்த காட்சிக்கு வருவோம்...

‘மும்முடிச்சோழன்’ ஆளும் தமிழகத்தில் டைட்டானியம் டை ஆக்சைடு தயாரிக்கிற தொழிற்சாலை வைக்க முடிவெடுத்தது டாடா நிறுவனம். வருகிற ‘இலாபத்தை’ எண்ணிப் பார்த்ததும் உடனே தலை அசைத்துவிட்டார் முத்தமிழ் அறிஞர்.

சுமார் 2500 கோடி ரூபாய் முதலீட்டில் தூத்துக்குடி சாத்தான்குளம் தாலுகாவில் உள்ள அரசூர் பகுதியில் இத்தொழிற்சாலையை நிறுவ முடிவு செய்தது டாடா நிறுவனம். இதற்காக ஏறத்தாழ 16 ஆயிரம் ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்தி டாடாவுக்கு தாரை வார்க்க முனைந்தார் தமிழக முதல்வர். ‘புரிந்து உணர்வு’ ஒப்பந்தமாம்! அதில் டாடாவுடன் கையெழுத்திட்டு களத்தில் இறங்கியபோதுதான் கலங்கிப் போனார் கலைஞர். அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு கிளர்ந்தார்கள். “எங்களுக்கு ஒரு வழி சொல்லிவிட்டு டாடாவுக்கு கம்பளம் விரி!” என்று ஆர்ப்பரித்தார்கள். ஜனநாயகக் குரலுக்கு ஆதரவாக மறுமலர்ச்சி தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஒன்றுதிரண்டதால், மேற்கு வங்கம், ஆந்திரா அளவுக்கு நிலைமை விபரீதம் ஆகாமல் தடுக்கப்பட்டது.

இது தற்காலிகம்தான்! “பொதுமக்களின் கருத்தறிந்த பிறகு முடிவு செய்வோம்” என்று அறிவித்துவிட்டு, காலம்பார்த்து காத்து இருக்கிறது கருணாநிதி அரசு!

இப்படி மேற்கு வங்கம், ஆந்திரம், தமிழகம் என்று ஏழைகளின் வயிற்றில் அடித்துப் பிழைக்கிறவர்கள்தாம் ஒன்று சேர்ந்து தில்லியில் அரசாட்சி நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

சொந்த மண்ணை அந்நிய நிறுவனங்களுக்கும், உள்ளூர்க் கொள்ளையர்க்கும் தாரை வார்த்துவிடத் துடிக்கும் இவர்களின் கையில் நாடு இருப்பது பரிதாபநிலைதான்!

விழித்துக் கொள்ளாவிட்டால், பின்னர் அழுது என்ன பயன்?

- வளவன்

____________________________________________________________

சங்கொலி 10.08.2007 இதழிலிருந்து....

No comments: