Wednesday, August 15, 2007

இலக்கியங்கள்தான் சமூகத்தை வாழவைக்கும் - வைகோ பேச்சு

சென்னை, ஆக.16-

இலக்கியங்கள்தான் சமூகத்தை வாழ வைக்கும் என்று ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ பேசினார்.

புத்தக வெளியீட்டு விழா
ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ ஆற்றிய இலக்கிய சொற்பொழிவுகளை அவரிடம் செயலராக இருந்த அருணகிரி, `தேன் மலர்கள்' என்ற புத்தகமாக தொகுத்துள்ளார். ராஜ ராஜன் பதிப்பகத்தின் சார்பில் இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா நிகழ்ச்சி சென்னை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்க கட்டிட அரங்கில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு ம.தி.மு.க. கொள்கை விளக்க செயலாளர் நாஞ்சில் சம்பத் தலைமை தாங்கினார். தொழிலதிபர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் புத்தகத்தை வெளியிட, `கல்கி' ராஜேந்திரன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். விழாவில் ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ ஏற்புரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

காப்பாற்ற வேண்டும்
உலகத்தில் மிகவும் பழமையான பாபிலோனிய நாகரிகத்தை விட பழமையான நாகரிகம் பூம்புகாரிலே இருந்தது என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். உலகின் பழைய நாகரிகங்களெல்லாம் ஏன் எடுத்து ஆராய்ச்சி செய்கிறோம். பண்டைய காலங்களிலே இருந்த பண்பாட்டுத்தளத்தை தெரிந்து கொள்வதற்கு தான் இந்த ஆய்வு. வீரமும், காதலும், விருந்தோம்பலும் தமிழருக்கே உரிய பண்பு. மனித நேய உணர்வோடு தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கு அடையாளம் இருக்கிறது. அதனால்தான் அறிஞர் அண்ணா எதையும் இலக்கியங்களை முன்வைத்து சொல்வார்.

தமிழ் இலக்கியங்களுக்கு நிகரானது எதுவும் இல்லை. அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் மனதை மாற்றி, உள்நாட்டு யுத்தத்துக்கு காரணமானது ஒரு புத்தகம். ஒரு எழுத்தாளன் நாட்டின் வரலாற்றை தீர்மானிக்கிறான். இலக்கியங்கள்தான் சமூகத்தை வாழ வைக்கும். அந்த இலக்கியங்கள் போற்றி வந்த பண்பாட்டை காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு வைகோ பேசினார்.

பேச்சாளர்கள் அப்துல் காதர், டாக்டர் சுதா சேஷய்யன், நடிகர் பிரகாஷ்ராஜ், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பேசினார்கள்.
முன்னதாக திரைப்படத்தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அனைவரையும் வரவேற்றார். முடிவில், வேளச்சேரி பி.மணிமாறன் நன்றி கூறினார்.

No comments: