Saturday, August 4, 2007

சேக்கிழார் செந்தமிழ்த் திருவிழாவில் வைகோ

தமிழ் உணர்வும், சைவ நெறியும் தழைத்து ஓங்கும் தில்லை மாநகரில்... அறிவுச்சுடர் கொளுத்தும் அண்ணாமலைபல்கலைக் கழகமும், துப்பாக்கிக்கு மார்புகாட்டி மொழிப் போர்க்களத்தில் இன்னுயிர்ஈந்த இராசேந்திரன் சிலையும், உலகுவியக்கும் நடராசர் ஆலயமும் அமைந்து இருக்கும் சிதம்பரம் நகரில்... அன்னைத்தமிழ் மொழிக்கு ஆலயத்தில் இடமில்லையா என ஆர்த்து எழுந்துபோராடும் மானமறவர்களின் பாசறையான சிதம்பரத்தில்... அறிவாசான் பெரியாரும், அறிஞர் பெருந்தகை அண்ணாவும்கொள்கை முழக்கமிட்டு திராவிட இயக்கஇளைஞர்களை உருவாக்கிய பாடிவீடான தில்லையம்பலத்தில், தமிழ்ப்பேரவைநிகழ்த்திய தெடீநுவச்சேக்கிழார் 21 ஆவதுசெந்தமிழ்த் திருவிழாவில், இலட்சியத்தலைவர் வைகோ அவர்கள் எழுச்சிமுழக்கமிட்டு பேருரையாற்றிச்சிறப்பித்தார்கள்.

29.7.2007 காலை முதலே கழகத்தோழர்களும், பல்கலைக் கழகப்பேராசிரியர்களும், மாணாக்கர்களும், தமிழ் அறிஞர்களும், நகரின் முக்கியப்பிரமுகர்களும் சாரை, சாரiயாகஅண்ணாமலை பல்கலைக் கழகவிருந்தினர் மாளிகைக்கு வருகை தந்து, அங்கு தங்கியிருந்த தலைவர் வைகோ அவர்களைச் சந்தித்து வரவேற்றுஅளவளாவி மகிழ்ந்தார்கள்.
தமிழ்ப்பேரவையின் நிர்வாகிகளான பேராசிரியர் அழ.பழனியப்பன், இராம.ஆதிமூலம், ஆ.சிவராம வீரப்பன், சரவணன்,லட்சுமணன், டாக்டர் முத்துசாமி, டாக்டர் இந்திரலேகா ஆகியோர்தலைவர் வைகோ அவர்களிடம் கனிந்த அன்புடன் அளவளாவினார்கள்.

தமிழ்ப் பேரவையின் பணிகளையும், கடந்தகால வரலாற்றினையும் அவர்களிடம் அக்கறையோடு கேட்டு அறிந்ததலைவர் வைகோ அவர்கள், தவத்திரு. குன்றக்குடி அடிகளாரையும், திருக்குறளார் முனிசாமி அவர்களையும் அழைத்து தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளை தாம் நடத்திய பாங்கினையும், தமிழ் அறிஞர் நடேச முதலியார் அவர்களை அழைத்து தென்காசியில் வள்ளுவர் விழாவில் பங்கேற்கச் செய்ததையும், குற்றாலத்தில் அவருக்குத் தொண்டனாக இருந்து பணிசெய்ததையும் தமிழ்ப் பேரவையினரிடம் நினைவு கூர்ந்தார்.

மாலையில் புறப்பட்டு, நூற்றுக்கணக்கான தோழர்களின் வாகன அணிவகுப்புடன் தெற்கு வீதி, மேற்கு வீதி, வடக்கு வீதி வழியாக கிழக்குவீதியில் நிகழ்ச்சி நடைபெறுகிற இராசி திருமண மண்டபத்திற்கு வைகோ அவர்கள் வருகை தந்தார். அப்போது அரங்கில் பேராசிரியர் பெரியார்தாசன் உரையாற்றிக் கொண்டிருந்தார். அவரது உரைக்குஎவ்வித இடையூறுமின்றி கழகத் தோழர்கள் நடந்து கொண்டதும், கழகத் தோழர்களும், முன்னணி நிர்வாகிகளும் அரங்கிற்கு வெளியே அமர்ந்து நிகழ்ச்சிகளைச் செவிமடுத்த பாங்கினையும் சைவச்சான்றோர்களும், பொதுமக்களும் கண்டு வியந்தார்கள். அரங்கிற்குவெளியே போடப்பட்டிருந்த இருக்கைகளையும், கடந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வீதியிலும், சாலை ஓரத்திலும் அமர்ந்து வெளியே திரையில் ஒளிபரப்பப்பட்ட விழா நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்தார்கள்.

பேராசிரியர் பெரியார்தாசன் அவர்களின் உரையினைத் தொடர்ந்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் மூசா உரையாற்றினார். அதன் பின்னர் வழக்கறிஞர் அ.சம்பந்தம் தலைவர்வைகோ அவர்களின் சிறப்புகளைக் குறிப்பிட்டு உரையாற்றினார்.

திருத்தொண்டர்புராணம் தந்த சேக்கிழார் சுவாமிகளை, தேரின்மீது அமர்த்தி, தானும் உடன் அமர்ந்து அவருக்கு கவறி வீசிக்கொண்டே,தில்லை மாநகரின் நான்கு வீதிகளிலும் வலம் வந்த மாமன்னன் இரண்டாம் குலோத்துங்கனைப் போல சேக்கிழாரின் பெருமையைப்பேச தலைவர் வைகோ நம்மிடையே வந்திருக்கிறார், “வை என்றால் வையகம், கோ என்றால் அரசன். எனவே, நமது வைகோ அவர்களும் அரசர்தான். தொண்டர் தம் பெருமையை எடுத்துச் சொல்ல தலைவர் வைகோ வந்திருக்கிறார். தலைவர்களாக உயர்ந்த தொண்டர்கள் உண்டு. இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை தலைவர்களாக உயர்ந்ததொண்டர்களும் உண்டு. ஆனால், நமது தலைவர் வைகோ அவர்கள் தொண்டர்களை உயர்த்திய தலைவர் என்றும் சுட்டிக்காட்டி வழக்கறிஞர் சம்பந்தம் உரையாற்றியபோது அரங்கில் உள்ளோர் விண்ணதிர கை தட்டி ஆரவாரம் செய்தார்கள்.

தொடர்ந்து உரையாற்றிய தமிழ்ப்பேரவையின் தலைவர் இராம.ஆதிமூலம் அவர்கள் தலைவர் வைகோ அவர்களின்பண்பு நலன்களைப் பாராட்டிப் பேசினார். பல ஆண்டுகளாகவே தலைவர் வைகோ எங்களிடம் உரையாற்ற வேண்டும் என்றதாகம் இப்போது நிறைவேறி உள்ளதுஎன்று மனநிறைவுடன் குறிப்பிட்ட ஆதிமூலம் அவர்கள், ஒரு அஞ்சல் அட்டைவழியே ஒப்புதல் கேட்ட எங்களை மதித்து, தொலைபேசி வழியே “உங்கள் வசதிக்குஏற்ப ஏற்பாடு செய்யுங்கள். கலந்துகொள்கிறேன்” என்ற பதில் அளித்த வைகோவின் பெருந்தன்மையும் - சாதாரண எளிய தொண்டர்களான எங்களை அண்ணாநகர் இல்லத்தில் வரவேற்று பாச உணர்வோடு பேசிமகிழ்ந்திட்ட பெருஉள்ளத்தையும் கண்டுவியந்து போனேன் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

புரட்சித்தலைவருக்குப் பிறகு காந்தசக்தியை நிகர்த்த ஈர்ப்புக்குரிய தலைவர் வைகோதான். உங்கள் கட்சியிலேயேசேர்ந்துவிடலாம் என்கிற அளவுக்குதலைவர் வைகோ ஈர்ப்பு சக்தியுள்ளமகத்தான தலைவர் என்றும், தொண்டர்களை மதிக்கிற நேசிக்கிறதலைவர் மட்டுமல்ல. தனக்குரிய எம்.பி.பதவி, மந்திரி பதவி, எம்.எல்.ஏ. பதவிவாய்ப்புகளைக் கூட தனது சகாக்களுக்கு ஒதுக்கித் தருகிற அதிசய தலைவர் வைகோஎன்றும், அடுக்கிக் கொண்டே ஆதிமூலம் அவர்கள் செந்தமிழ் நடையில் சொற்பொழிவாற்றியதைக் கேட்டஅவையினர் அகமகிழ்ந்து ஆர்ப்பரித்தார்கள்.

மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர்ஸ்ரீதர் வாண்டையார் அவர்கள் நமது ஊருக்கு வருகை தந்துள்ள தலைவர் வைகோ அவர்களை வரவேற்று சிறப்புச் செய்ய வேண்டும் என்றார். பட்டுக்கோட்டையில் ம.தி.மு.க. அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினரும், முன்னாள் நகரமன்றத் தலைவரும் ஆன விசுவநாதன் மறைவுற்றபோது அவரது இறுதி நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுடன் 12 கிலோ மீட்டர்தொலைவு நடந்தே வந்து மரியாதை செலுத்தியதைக் குறிப்பிட்டு தொண்டர்களை மதிக்கிற தலைவர் வைகோதான் என்று நெஞ்சம் நிறைந்து புகழாரம் சூட்டினார்.

நமது இலட்சியத் தலைவர் வைகோஅவர்கள் இரவு 8.50 மணிக்கு தமது உரையைத் தொடங்கி 9.50 மணிக்குநிறைவு செய்தார். குற்றால அருவியாய், தழுவிடும் தென்றலாய், தெவிட்டாததேனமுதாய், மடை திறந்த காவிரிப்புதுப்புனலாய் தங்கு தடையின்றிதாவிக்குதித்து துள்ளி ஓடி வரும் இலக்கியச்சுவை மிகுந்த தலைவர் வைகோவின்சொற் பொழிவினை இமை மூடாது உற்றுக்கேட்டுக் உவப்படைந்தனர் மக்கள்! “தொண்டர்களை உயர்த்தியவன் வைகோ"என்றார்கள். "தொண்டர்களால் உயர்ந்தவன் வைகோ" என்று திருத்திச்சொல்லி தொண்டர்களுக்குச் சிறப்புச்செய்தார் வைகோ. பாவேந்தரும், மறைமலை அடிகளாரும் ஊட்டிய உணர்வோடுதான் நான் இந்த விழாவில்கலந்து கொள்கிறேன் என்று தலைவர் வைகோ அளித்த விளக்கத்தில் பொதிந்திருந்த நமது இலட்சிய உறுதி கண்டுஅவையினர் பெருமிதம் கொண்டனர்.

நிகழ்ச்சியினைத் தொடக்கம் முதல் வந்துஅமர்ந்து காண தாம் விரும்பியதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மாலை 6மணிக்கு மேல் வந்தால்போதும் என்றுதெரிவித்ததையும், இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை இராகு காலம்என்பதால் அப்படிச் சொல்லி இருப்பார்களோ என்று அய்யப்பட்டதையும், இராகு காலம் பார்க்காமல் தேர்தலில்வேட்பு மனுத்தாக்கல் செய்ததையும் வேலூர்ச் சிறையில் இருந்து விடுதலைபெற்று வெளியே வந்ததையும் குறிப்பிட்டார் வைகோ. பெரியாரின் இலட்சிய உறுதியும், அண்ணாவின் அரிய அணுகுமுறையும் தலைவர் வைகோ அவர்களிடம் மின்னி மிளிர்வதைக் கண்டு அரங்கில்இருந்தோர் அனைவரும் மகிழ்ந்தார்கள்.

அகன்ற தேரோடும் வீதியில் ஆரவாரத்துடன் இளவரசன் வீதி விடங்கன் தேரேறி வந்தபோது, ஓடி வந்துதேர்க்காலில் சிக்கி மடிந்த பசுங்கன்றின் துயர் தாளாது நீதி கேட்டு தாய்ப்பசு மணிஓசை எழுப்பியபோது, தாய்ப்பசுவைப் போலதாமும் மகனை இழந்த துயரை அனுபவிக்க வேண்டும் என்று நீதியுரைத்த, மன்னன் மனுநீதிச் சோழன் தனதுமகனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்று தண்டித்த கதைப் பாடலை தலைவர் வைகோ விவரித்தபோது, நீதிகாக்க, தன்மகனையே கொன்று தண்டித்த மனுநீதிச் சோழ மன்னன் ஆண்ட தமிழ்நாட்டில்,கொலைக் குற்றம் சுமத்தப்பட்டவர்கள், அடியாள்களை ஏவி கொலை வெறிச்செயலில் ஈடுபட்ட ‘திருக்குமாரர்கள்’ அரசமரியாதையோடு அழகாக வலம்வரும்இன்றைய ஆட்சியாளர்களின் பிள்ளைப்பாசத்தை அரங்கில் உள்ளோர் ஒப்பிட்டுநெஞ்சம் பதைத்தார்கள்.

பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தம், பெரும்புலவர் நமச்சிவாயம், மதுரை ஆதினகர்த்தர், குன்றக்குடி பொன்னம்பலஅடிகள், பேராசிரியர் அறிவொளி, கா.காளிமுத்து, நாஞ்சில் சம்பத், பேராசிரியர்கள் சத்யசீலன், செல்வகணபதி, அகர முதல்வன் குமரி அனந்தன், சீர்காழிடாக்டர் சிவ.சிதம்பரம், இளம்பிறைமணிமாறன், சாரதா நம்பி ஆரூரான்ஆகிய தமிழ் அறிஞர்களின் உரையினைக்கடந்த 20 ஆண்டுகளாகக் கேட்டு மகிழ்ந்ததமிழ்ப் பேரவையினர் - இந்த ஆண்டுதலைவர் வைகோ அவர்களின் இலக்கிய உரை கேட்டு மகிழ்ந்தும், எவ்விதசிறுதுண்டுத்தாள் குறிப்புமின்றி தமிழ் இலக்கிய வரலாற்றினையும் அழகுதமிழ்ப்பாடல்களையும், சம்பவங்களையும் எடுத்தியம்பும் வைகோ சொற்பொழிவின்மாட்சி கண்டும் வியந்தனர்.

வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்,குட்டி (எ) சண்முக சிதம்பரம், மாவட்டச்செயலாளர்கள் டாக்டர் மாசிலாமணி,கு.சின்னப்பா ஆகியோரும் கழக முன்னணியினரும் திரளாக தோழர்களும்வருகை தந்து சிறப்பித்தார்கள். மாவட்டச் செயலாளர் சௌ.பத்மநாபன் அவர்களின் வழிகாட்டுதலில் சிதம்பரம் நகர செயலாளர் எல்.சீனுவாசன் அவர்கள் விழா சிறக்கஉரிய ஏற்பாடுகளைச் செவ்வனே செய்திருந்தார்.

கோயில் குடமுழுக்குகளில் தேவாரம், திருவாசகம் பாடுவதற்குத் தடை வாங்கியதருமபுரம், திருப்பனந்தாள் ஆதினங்களைக் கண்டித்தும், உயர்நீதிமன்ற வழக்கினைத் திரும்பப் பெற அவர்களை வலியுறுத்தியும் விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் மறுமலர்ச்சிதி.மு.கழகத்தின் மாண்பு தில்லை மாநகரில்மேலும் மேலும் உயர்ந்திருக்கிறது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
தொகுத்து வழங்கியவர் ஆ.வந்தியத்தேவன். கழக வெளியீட்டுச் செயலாளர். சங்கொலி 10.08.2007 இதழிலிருந்து...

சங்கொலியை இனையத்தில் படிக்க... www.sangoli.org

No comments: