Friday, August 3, 2007

கலாம் அவர்களே! வருக! வருக!

மீண்டும் சென்னைக்கு - தமிழ் மண்ணுக்கு வந்து சேர்ந்திருக்கும் அப்துல்கலாம் அவர்களை, இருகரம் கூப்பி வருக வருக என வரவேற்கிறோம்! கொடுத்தபணியைத் திறம்படச் செய்து முடித்தவர், அப்பழுக்கற்றவர் என்ற முறையில் இராமேசுவரத்தின் புகழை இமயக் கொடுமுடியில் நிலைநாட்டி, நல்லன நாடுவோர் இதயம் எல்லாம் பெருமைப்படும்படி பதவி வகித்தவர் என்றமுறையில் - அவரை நாம் மனநிறைவுடன் வரவேற்கிறோம்!

குடியரசுத் தலைவர் பதவி கிடைக்காதா என எத்தனையோ பேர் அரண்மனைச்சதிகளிலும் ஆள்பிடிக்கும் படலங்களிலும் உள்ளடி வேலைகளிலும் இறங்கிடும் மண்ணில் அப்துல்கலாம் அவர்களை - அது தானாகத்தேடி வந்தது! பதவி கிடைத்தவர்களுள் சிலர் பேராயத்தாலேயே ஒதுக்க முடியாதபடி பேராயத்திலும் தனிப்பட்ட முறையிலும் தன் வலிமை - சொந்த வலிமை - பெற்றிருந்தவர்கள்ஆவர். பீகார் மாநிலத்தைச் சார்ந்தவரும் பண்டித நேரு வல்லபாய் பட்டேல் ஆகியோர்க்கு இணையான அரசியலில் செல்வாக்குப் பெற்று இருந்தவருமான இராஜேந்திரபிரசாத் அவர்களை இதற்கு எடுத்துக்காட்டாகத் திட்டவட்டமாகக் கூறலாம். அடுத்ததாக சர்வபள்ளி இராதாகிருஷ்ணனைச் சொல்லலாம்.

நீங்கள் எத்தனைக் குட்டிக்கரணம் அடிக்கச் சொன்னாலும் அடிக்கிறேன்; பதவிதந்தால்போதும் என்று அப்பதவியைப் பெற்றவர்களும் உண்டு.

அப்துல்கலாம் அவர்களோ இப்பதவி வேண்டும் என்று யாரிடமும் கேட்டதில்லை; அப்படிக் கனவு கூடக் கண்டதில்லை! வெற்றிகரமாக ஏவுகணைகளைச் செலுத்திய பின்பும் தானுண்டு; தன் ஆராய்ச்சிகளுண்டு என்று அவற்றோடு அண்ணா பல்கலைக் கழகத்தில் ஒன்றுபட்டு இருந்தவர் அவர். மாணவர்களை ஊக்குவித்தவர் அவர். வலிமை படைத்த பாரதம் என்ற பாரதியின் கனவே அவரிடமும் இருந்தது. இஸ்லாத்தின் பகை என்றுசொல்லப்படும் பாரதிய சனதாதான் அவரைக் கண்டெடுத்தது. வேறுவழியின்றிப் பேராயமும் ஆதரித்தது. அம்மு சாமிநாதன் மகள் இலட்சுமிபாயைத் திறமை குறைந்தவர் என்றோ, நேர்மை அற்றவர் என்றோ பழிப்பதற்கில்லை. எனினும் பாரதியசனதாவும் பேராயமும் ஒன்றுபட்டுப்போன வேட்பாளரை இடதுசாரிகள் கட்டாயங்கள் சிலவற்றால் எதிர்த்தார்கள்.

வெற்றிபெற்ற அப்துல்கலாம் பிறவியில் மரைக்காயர்! கடலில் கலம் செலுத்திய மரபில் வந்தவர்! எனவே அரசியல் சூறாவளிகளுக்கு இடையில் இந்தியக் கலம் பயணம் செய்ய உதவினார். சரியான மீகாமன் ஆக இருந்தார். “ஆமாம்சாமி”ப் பதவிதான்! எனினும் அதிலும் அறநெறியையே பேணினார்.

இவரையே மீண்டும் குடியரசுத் தலைவர் ஆக்கியிருக்கலாம். மதவெறியர்கள் என்று பழிக்கப்பட்ட பாரதிய சனதாகூட அவரை மீண்டும் பதவியில் அமர்த்துவதை ஏற்கும் நிலையில்தான் இருந்தது. பேராயம்தான் வேறுகணக்குப்போட்டது. எதற்கெடுத்தாலும் நேர்மை நேர்மை என்கிறாரே! இவரைக்கேட்டால், அரசியல்வாதிகள் ஆதாயம் பார்க்கக்கூடாது என்கிறாரே! இவரே நீடித்தால்....... நாளை இன்னும் என்னென்ன செய்வாரோ?” என்று கருதியது, எதிலும் ஆதாயம் தேடும் பேராயம்!

“அர்சண்டினா நீதிமன்றத்தில் போஃபர்சு விவகாரத்தை எப்படியோ கவிழ்த்துவிட்டபோதிலும், நாளை அதை எதிரணி எழுப்பாமலா விடும்? அப்போது இவர் இருந்தால் ‘ஜோகிந்தர் சிங் கூறிய புகாரில் உண்மை உள்ளது! நடவடிக்கைஎடுங்கள்!’ என்று யாரேனும் முறையிட்டால்... இவர் நமக்கு எதிராகத் திரும்பமாட்டார் என்பது என்ன உறுதி?” என்றும் நினைத்தது. எதிலும் ஆதாயம்தேடும் பேராயம்! அதனால் ஒரு தலையாட்டி பொம்மைதான் வேண்டும் என்று இவர் பெயரை ஏற்க மறுத்தது! அதனால் இழப்பு இவருக்கு இல்லை! இழப்பு எல்லாம் நேர்மைக்குத்தான்! கைமாறு கருதாத கடமைக்குத்தான்!

இவருக்கு இரண்டாம்முறை பதவிதரக்கூடாது என்றவர்களுள் முதல்வர், ஒருமுறைகூட அதிகாரப்பூர்வமாகத் தலைமை அமைச்சர் பதவி ஏற்கமுடியவில்லையே என்ற வெறிகொண்ட சோனியா. மற்றவர், - இரண்டாமவர்” சொன்னபோதெல்லாம் வந்து என் புகழ்பாடி விட்டுச் செல்வதைத்தவிர இவருக்கு வேறு என்ன வேலை? சட்டமன்றப் பிணிப்பொன்விழாவில் வந்துபேசு என்று கூப்பிட்டால் நழுவுவதா?” என்று இன்னும் குமுறிக்கொண்டு இருக்கும் முதல்வர் மு.க. அவர்கள். இடதுசாரிகள் எதிர்க்கவில்லையா என்று கேட்கலாம் சிலர். அவர்கள் எதிர்ப்பு, கொள்கைகளின் அடிப்படையில் இல்லை; சில பேரங்களின் அடிப்படையில்தான்! நம்மைமீறி யார் போய்விடுவார்கள் என்று நினைத்த பேராயம், இப்போது வகையாகச் சிக்கிக்கொண்டு திணறுகிறது! அதுவும் கலாம் அவர்கள் வரமுடியாமைக்கு இன்னோர் அடிப்படை!

கலாம் அவர்களைப் பொறுத்து நாம் பெருமைப்படுவது நாட்டுப் பற்றுக்காக மட்டும் இல்லை; நேர்மைக்காகவும் புகழ்கிறோம்! குடியரசுத் தலைவராகச் சிலர்வந்தபோது, அவரது குடும்பம் எல்லாம் குளுமானோடு அம்மாளிகைக்கே படைஎடுத்துவிடும்! கூடாரம் அடித்துவிடும்! ஆனால், தந்தை மறைவுக்குப்பின் தன்னை அண்ணனாக மட்டுமின்றித் தந்தையாகவும் வளர்த்த அண்ணனைக்கூட - பாசமே உருவான அண்ணனைக் கூட - பதவியேற்கும்போது மட்டும் நட்போடும் சுற்றத்தோடும் வருக என்றார். விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்குத்தானே; பதவி ஏற்பைப் பார்த்தாயிற்றா - புறப்படுங்கள் என்று வழியனுப்பியவர் அப்துல்கலாம். ஆளுநர்கள் கூடச் சொந்தபந்தங்களை ஆடவிட்டு மகிழ்கையில், அகப்பட்டதைச் சுருட்டு என்று திரிகிற வேளையில், கலாம் தன் மரியாதையைக் காத்துக் கொண்டார். மதுரையில் ஒரு பேர்வழியிடம் பணம் சிக்கியது என்று காவல்துறை வேட்டைக்குப்போனால், ஓய்வு பெற்ற ஒரு காவல் அலுவலரே வந்து “இது அமைச்சர் பணம்! கை வைக்காதே- பணத்தின்மீதும் அவன் மீதும்!” என்று “சான்றிதழ்” படித்துள்ளார்.

இவற்றை எல்லாம் எண்ணிப் பார்க்கையில், “பதவி ஏற்க வந்தபோது (என் துணிமணி போன்றவை அடங்கிய) இரு பெட்டிகளோடு தான் வந்தேன்! அதேபோல இருபெட்டிகளுடன் தான் (தமிழ் மண்ணுக்குத்) திரும்புகிறேன்! என்று கலாம் கூறினார் என்றால்,

இவற்றைத் தவிர்த்து நான் எடுத்துச் செல்வன நான் என் காசுபோட்டு வாங்கியநூல்கள் தான் என்றும் கலாம் கூறினார் என்றால்,

“பிழைக்கத் தெரியாத மனிதன்!” என்று பேராயக் கூட்டம் வேண்டுமானால் கூறலாம். நீதி, நேர்மை, ஒழுக்கம் போற்றுவோர், இதற்காகவும் இவரைப்போற்றுவர்!

ஆம்! தமிழக முதல்வராகவே இருந்தார் அண்ணா! அவர் மறைந்தபோது அவர்வீட்டில் இருந்து ரூ.நூற்றுச் சொச்சம்தான் இருப்பு என்று காட்டியது வங்கிக் கணக்கு ஏடு! காமராசருக்கும் அந்தப் பெருமை கிடைத்தது! அத்தகுநேர்மையாளர் என்ற புகடிந இப்போது கலாமுக்கும் கிடைத்து உள்ளது! தமிழ் மண்ணின் மானத்தை இவர்களாவது காக்கிறார்களே!

தனிக்கட்டையாகவே இவர் வாழ்வும் போகிறதே என யாரும் எண்ணவேண்டாம்! இவர் குடும்பம் நடத்திப் பொலபொலவெனப் பிள்ளைகளைப்பெற்றுப் போடவில்லையே தவிர, பள்ளிப் பிள்ளைகள் எல்லாம் தன்பிள்ளைகள் என்று நினைத்தார் இவர். மற்றவர்கள் வெளியூர் சென்றால் எந்த முதலாளியைப் பார்க்கலாம் என்றிருந்திடும் வேளையில், இவர் பள்ளிகளையும், கல்லூரி மாணவர்களையும் தேடிச்சென்றுப் பார்த்தார். அவர்களுடன்ஆசிரியராக இல்லாமல் ஒரு பெரியப்பாபோல், ஒரு தாத்தாபோல் கலந்துரையாடினார். “உங்கள் நாடு முன்னேற நன்கு படியுங்கள்! நிறையக் கனவு காணுங்கள்! கனவுகளை நனவாக்குங்கள்! நாட்டை உயர்த்திப் பிடியுங்கள்!” என்று அறிவுரை கூறினார். அவைவெறும் அறிவுரை மட்டுமில்லை! நம்பிக்கை விதைகள்! இந்த விதைகளில் பற்பல மனித குலத்தின் மேன்மையைப் பேணும் ஆலாக மாவாக வேம்பாக வளர்ந்து தழைத்து நிழல் கொடுக்கும்! பலன் கொடுக்கும்! அவர் பெயரை என்றும் முழங்கும்!

ஆம்! கலாம் “முடியாது” என்ற சொல்லையே ஏற்கமாட்டார்; எதுவும் முயன்றால் முடியும் என்று நம்புவார் என்று - இன்றும் அவர் மாணவராகத் திகழும் ஏ.கே.ஜார்ஜ் (அண்ணா பல்கலைக் கழகம், கூறிய செய்தியை 21.7.2007 அன்று எக்ஸ்பிரசில் பார்த்தோம்! ஆம்! அரசியல்வாதிகளும், மதமௌடிகங்களும் மலிந்த இந்த நாட்டை, கலாம் விரும்புவது போல் 2020 இல் வல்லரசாக்கமுடியுமா என்று தயங்க வேண்டாம்! அவர் விதைத்த நம்பிக்கை விதைகள் குழந்தைகளைத் தருவாக்காதா? நாட்டின் திருவாக்காதா? முடியும்! முடியும்! இந்நிலை காணமுடியும், முயன்றால்!

ஆனால், முப்படைத் தலைவர் என்ற தகுதியை மற்றவர்கள் பெயருக்கு மட்டும்வைத்துக் கொண்டிருந்த இந்த நாட்டில், அப்படையினரோடு சேர்ந்து போர்வானூர்தியில் மின்னல் வேகத்தில் பறந்தவர் - ஆழ்கடலுக்குள் நீர்மூழ்கிக்கப்பலில் சென்று நம் வலிமையை மதிப்பிட்டவர் - பாகிஸ்தானும் சீனமும் மிரட்டிக் கொண்டிருக்கும் இமயக் கொடுமுடிக்கும் சென்று காலாட்படையினருடன் சராசரி மனிதனாய்க் கலந்து உரையாடியவர், இவர் ஒருவரே! இவர் ஒருவரே! அதற்காகவும் தமிழகம் பெருமைப்படலாம்!

கலாம் அவர்களே! நீங்கள் வருவீர்கள் என்று இராமேசுவரம் வீட்டை உங்கள் அண்ணன் திருத்தி வைத்துள்ளார்! அந்தப் பாசம்மிகும் அண்ணனைப் போய்க்காணுங்கள்; அவரோடு நாள் சில தங்குங்கள்! பின் அண்ணா பல்கலைக்கழகம் வந்து உங்கள் ஆராய்ச்சிகளைத் தொடருங்கள்! அண்ணன் பாசத்தை நாங்கள் அரசியலில் உணர்ந்ததுபோல், நீங்கள் குடும்பத்தில் உணர்ந்தவர்கள். இராமேசுவரம் அகலத் தொடர் வண்டிப் பாதையை நீங்கள் திறந்துவைத்து இருக்கவேண்டும். சிலர் சதியில் அது முடியாமல் போனது. ஆனால், அண்ணன்- தம்பி சந்திப்பை எதனாலும் தடுக்க முடியாது! சென்று அண்ணனைக் கண்டபின்பு அண்ணா பல்கலைக் கழகம் வாருங்கள்! வணக்கம்!
________________________________________________________

அப்துல் கலாம் அவர்களுக்கு சங்கொலி 03.08.2007 இதழ் மூலம் அளிக்கப்பட்ட வரவேற்பு...

No comments: