Wednesday, August 15, 2007

அரசியல் பழிதீர்க்க வழக்கு- வைகோ

சென்னை: அரசியல் வஞ்சகத்தை தீர்த்துக் கொள்வதற்காக என் மீது வழக்கு போடுகிறார்கள் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். மதிமுக எம்பிக்களான செஞ்சி ராமச்சந்திரன், எல்.கணேசன் ஆகியோர் மதிமுகவை விட்டுப் பிரிந்து சென்றதற்கு முதல்வர் கருணாநிதி தான் காரணம் என வைகோ குற்றம் சாட்டியிருந்தார். வைகோவின் இந்தப் பேச்சு கருணாநிதிக்கு பெரும் இழிவை உண்டாக்கும் வகையில் இருப்பதாகக் கூறி மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, வைகோ மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இன்று சென்னை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார் வைகோ. பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில், அரசியலில் என்னை பழிவாங்குவதற்காக என்மீது ஆளும்கட்சி போட்ட இந்த வழக்கில், நீதி வென்று உண்மை கண்டிப்பாக ஜெயிக்கும். நான் நம்பிக்கையோடு சட்டப்படி வழக்கை சந்திப்பேன்.
கடந்த அதிமுக ஆட்சியில் கேபிள் டிவி இணைப்பை தேசியமயமாக்க ஜெயலலிதா முயற்சிகள் எடுத்தார். ஆனால் அப்போது அந்த மசோதாவை ஆதரிக்க முடியாது என்று கூறியவர், இன்று அதே சட்டத்தை கொண்டு வந்துள்ளார்.
இலங்கை ராணுவம், அப்பாவி தமிழர்கள் மீது நடத்திவரும் கொடூர தாக்குதலுக்கு இந்திய அரசு, அந்நாட்டு ராணுவத்திற்கு தொடர்ந்து ஆயுதங்கள் சப்ளை செய்து வருவது கடும் கண்டனத்திற்குரியது. இதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகளும் உடந்தையாக இருக்கின்றன. மீனவர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் இதுவரை ஓராயிரம் முறைக்கு மேல் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இந்த கோழைத்தனமான தாக்குதலில் எல்லாம் விடுதலைப் புலிகள் ஈடுபட மாட்டார்கள்.
ஆனால் மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலை எதிர்த்து இந்திய கடற்படை தாக்குதல் நடத்தியதே கிடையாது என்றார்.

No comments: