Monday, August 20, 2007

இந்திரா காந்தி இருந்திருந்தால் தனி ஈழம் மலர்ந்திருக்கும்: வைகோ

செஞ்சி, ஆக.21: இந்திரா காந்தி உயிரோடு இருந்திருந்தால் தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும் என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.

மேல்மலையனூர் ஒன்றியம் செக்கடிகுப்பம் கிராமத்தில் மதிமுக கிளை சார்பில் தமிழ் மன்னர்களின் கலை இலக்கியப் பண்பாட்டு பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் வைகோ பேசியது:

18 ஆண்டுகளுக்கு முன் வவுனியா காட்டில் கரும்புலிகளின் பயிற்சிக் கூடத்தில் மத்தியில் அமர்ந்திருந்தேன். இப்போது இங்கே கருப்புச் சட்டை அணிந்திருக்கும் பகுத்தறிவு இளைஞர்களின் மத்தியிலே அமர்ந்திருப்பது பழைய நினைவை எனக்கு ஏற்படுத்துகிறது.

30 ஆண்டுகளாக திமுகவை காத்து வளர்த்து வந்தேன். என் உயிரையும் கொடுக்கத் தயாராக இருந்தேன். ஆனால் என் மீது கொலைப் பழி சுமத்தப்பட்டது. இச்செய்தி அறிந்ததும் ஆயிரம் பாம்பு கடித்தது போலவும், ஒரு லட்சம் தேள் கொட்டியது போலவும் துடித்தேன்.

ஈழத் தமிழர்களுக்கு எப்போதும் என் ஆதரவு உண்டு. தமிழர்களின் மீது சிங்கள ராணுவம் குண்டு மழை பொழிகிறது. இதற்கு இந்தியா ஆயுதங்களையும், விமானங்களையும், ரேடார்களையும் அளிக்கிறது. ஈழத்தில் தமிழினத்தை அழிக்க சிங்கள அரசு முயல்கிறது.

தமிழர்களுக்கு விரோதமான அரசு மன்மோகன் சிங் அரசு. தமிழ் ஈழம் மலர்வதை உலகில் எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்து தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும், தமிழர்கள் ஆண்ட ஈழத்தை தமிழர்களுக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன். தமிழர்களுக்கு தனி நாடு தர முடியுமா? என்று ஆலோசனை செய்து வருகிறேன் என்று இந்திரா பதில் அளித்தார். ஆனால் அவர் இறந்து விட்டது நமக்கு துரதிர்ஷ்டமாகப் போய் விட்டது. அவர் உயிரோடு இருந்திருந்நதால் கண்டிப்பாக தனி ஈழம் ஏற்பட்டிருக்கும் என்றார் வைகோ.

விழாவுக்கு மாவட்ட இலக்கிய அணிச் செயலர் மா.அர்ச்சுணன் தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலர் மு.சுப்பிரமணி வரவேற்றார். தலைமைத் தணிக்கைக் குழு உறுப்பினர் ஏ.கே.மணி முன்னிலை வகித்தார்.

மாவட்டப் பொருளர் மா.சுப்பிரமணி, மாநிலக் கொள்கை விளக்கச் செயலர் மு.குமார், பேராசிரியர் அ.பெரியார், பாடகர் நா.காத்தவராயன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் மா.ஏழுமலை உள்ளிட்ட மதிமுகவினர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்டச் செயலர் டாக்டர்.இரா.மாசிலாமணி சிறப்புரையாற்றினார்.
---------------------------------------------------------------
நன்றி: தினமணி நாளிதழ் (21.08.2007)