Saturday, December 29, 2007

வைகோ எடைக்கு இரு மடங்கு எடை வெள்ளி கட்டி பரிசு


சென்னை: "புத்தாண்டில், பார்லிமென்ட் தேர்தல் வரும்,'' என்று ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேசினார்.

வைகோவின் நாற்பது ஆண்டு கால பொது வாழ்க்கையை பாராட்டிஅவருக்கு எடைக்கு இரு மடங்கு எடை வெள்ளிக் கட்டிகள் வழங்கும் விழா பொதுக் கூட்டம் தென் சென்னை ம.தி.மு.க., சார்பில் வேளச்சேரியில் நடந்தது. மாவட்டச் செயலர் மணிமாறன் தலைமை வகித்தார். மேடையில் வைக்கப்பட்டிருந்த பெரிய தராசில் வைகோ உட்கார வைக்கப்பட்டார். இன்னொரு தட்டில் அவரது எடைக்கு இரு மடங்கு வெள்ளிக் கட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டன. வைகோ 25 முறை சிறை சென்றதை நினைவு கூறும் வகையில் அவருக்கு 25 சவரன் தங்க சங்கிலியும் அணிவிக்கப்பட்டது. கூட்டத்தில், வைகோ பேசியதாவது:

எனக்கு வெள்ளி, தங்கம் தரும் விழாவில் பங்கேற்க மறுத்தேன். ஆனால், மணிமாறன் போன்ற தம்பிகள் மனம் புண்படக் கூடாது என்பதற்காக ஒப்புக் கொண்டேன். இங்கே பேசியவர்கள் எனக்கு எடைக்கு எடை தங்கம், கோமேகம் தருவதாக சொன்னார்கள். அதையெல்லாம் நான் விரும்புவதில்லை. நான் தங்கத்தை அணிவதில்லை. எனது பொது வாழ்க்கையை பாராட்டி தராசில் உட்கார வைத்தீர்கள். என்னை பொருத்தவரை உங்கள் இதயத்தில் நான் அமர்ந்ததாக கருதுகிறேன். உங்களுக்கு என் உயிர் உள்ள வரை அன்பும் பாசமும், உழைப்பும் மட்டும் தான் தரமுடியும். இப்போது, பதவிகள் உங்களுக்கு தரமுடியாமல் இருக்கலாம். காலம் கருணை காட்டும். நமக்கும் காலம் வரும். உங்களுக்கு கிடைக்க வேண்டியதெல்லாம் கிடைக்கும். தமிழர்களின் நலம் காக்கும் கொள்கையிலும், நீதி நிலைநாட்டுவதிலும் நாம் உறுதியாக இருக்கிறோம். கடந்த 13 ஆண்டுகளாக பல துன்பம், துயரத்தை கடந்து வந்து விட்டோம். பதவிகள் நிரந்தரமான புகழை தராது. தியாகம் மட்டும் நிரந்தரமான புகழை தரும். புத்தாண்டில் நிச்சயம் தேர்தல் வரும். அதில் தி.மு.க., ஆட்சி துõக்கி எறியப்படும். இவ்வாறு வைகோ பேசினார்.

தலைமை நிலையச் செயலர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், துணைப்பொதுச்செயலர் மல்லை சத்யா, கொள்கை பரப்பு செயலர் நாஞ்சில் சம்பத், பகுதி செயலர் சு.செல்வபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏழை பெண்களுக்கு ஐந்து கிலோ அரிசி பைகள், 500 பெண்களுக்கு இலவச புடவைகள், பத்து ஊனமுற்றோருக்கு சைக்கிள்கள், இஸ்திரி பெட்டிகள், தையல் மிஷின்கள் ஆகியவற்றை வைகோ வழங்கினார்.

No comments: