Saturday, December 8, 2007

முல்லைப் பெரியாறு: மதுரையில் வைகோ உண்ணாவிரதம்

வெள்ளிக்கிழமை, டிசம்பர் 7, 2007

மதுரை: திமுக அரசு ஆடம்பர விழாக்களை நடத்தி மின்சாரத்தை கபளீகரம் செய்ய பார்க்கிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.


முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத கேரள அரசை கண்டித்தும், இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் இன்று மதிமுகப் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் 800க்கும் மேற்பட்ட மதிமுகவினர் மதுரை, தல்லாகுளத்தில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன் உண்ணாவிரத போராட்டம் இருந்தனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் நிறுவனரும், தலைவருமான டாக்டர் என். சேதுராமனும் கலந்து கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது,

தமிழகத்தில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மின்சார வெட்டு மக்களை வாட்டி எடுத்துக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகி வருகின்ற விவசாயிகளால் விவசாயம் செய்ய முடியவில்லை. தொழிற்சாலைகள் முடங்கி கிடக்கின்றன.

தொழிற்சாலைகள், ஜெனரேட்டர்கள் மூலம் இயங்க வேண்டியிருப்பதால் யூனிட்டுக்கு ரூ. 4.50 செலவிட வேண்டிய தொழிற்சாலைகள் ரூ.15 செலவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக மாணவ-மாணவிகள் இரவு நேரங்களில் படிக்க முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.

மின்சார நிலையங்கள் பராமரிப்பு இல்லாமல் இருப்பதை 3 மாதங்களுக்கு முன்னரே அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா எடுத்துக் கூறி தமிழகத்தில் மின் பற்றாக்குறை இருப்பதை சுட்டிக் காட்டினார். அப்போது தமிழகத்தில் மின்வெட்டே கிடையாது என்று ஆற்காடு வீராசாமி ஓங்கி கூறினார்.

மக்களின் நம்பிக்கையை இழந்துவரும் திமுக அரசு ஆடம்பர விழாக்களை நடத்தி இன்னமும் மக்கள் செல்வாக்கு இருப்பதாக காட்டிக் கொள்ள முயற்சி செய்கிறது. ஆடம்பர விழாக்கள் மூலம் மின்சாரத்தை கபளீகரம் செய்ய பார்க்கிறது.

டை அமோனியம் பாஸ்பேட் போன்ற உரங்களின் விலை அதிகமாகி கள்ள சந்தையில் விற்கப்படுகிறது. இந்த உரங்களை விவசாயிகள் வாங்க முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

மின்வெட்டை கண்டித்தும், விவசாயிகள் நெல்விலை குவிண்டாலுக்கு (100 கிலோ) ரூ.1,000 வழங்கக் கோரியும், உர விலையை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்தும் மதிமுக மிகப்பெரிய போராட்டம் நடத்த இருக்கிறது. இன்னும் ஓரிரு நாட்களில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்றார் வைகோ.

http://thatstamil.oneindia.in/news/2007/12/07/tn-power-wastage-for-dmk-functions-vaiko.html

No comments: