Monday, January 14, 2008

ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம்: வைகோ

சென்னை, ஜன. 13: ஜல்லிக்கட்டை நடத்தும் வகையில் தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.

இது தொடர்பாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை வைகோ வெளியிட்ட அறிக்கை:

ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் புறநானூற்றுக் காலத்தில் இருந்தே தொன்றுதொட்டு நடைபெற்று வரும் தமிழர்களுக்கே உரிய வீரக்கலை.
அலங்காநல்லூரில் நடைபெறுகிற ஜல்லிக்கட்டில், காளைகள் ஆயுதங்களால் தாக்கப்படுவது இல்லை -வேறு எந்த ஊறும் நேர்வது இல்லை. பங்கேற்கும் வீரக் காளையர் காயமடைவதும், சில வேளைகளில் சிலரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதும் எந்த வீரப் போட்டியிலும் நடக்கக் கூடிய ஒன்றுதான்.

இந்தக் காரணத்தை அடிப்படையாகக் கொண்டால், கார் பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்பவர்களுக்கு ஆபத்துகள் ஏற்படுகின்றன. மது விருந்துக் கேளிக்கைகளும், மேற்கத்தியக் கலாசாரமும் தமிழர் பண்பாட்டை, நாகரிகத்தை சிதைத்துச் சின்னாபின்னம் செய்து கொண்டு இருக்கின்றன. இன்றைய சூழலில், தமிழர்களின் கலாசாரத்தை, பண்பாட்டை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற வேண்டும்.

இதற்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டில் தடை விதித்தவுடன், அதை எதிர்கொள்ள உரிய காலத்தில் தகுந்த நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ளத் தவறியது. இதன் விளைவாகவே தைப்பொங்கல் பண்டிகை வேளையில் இந்த அதிர்ச்சியைத் தமிழகம் சந்திக்க நேர்ந்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் முடிவை மறு ஆய்வு செய்யும் நடவடிக்கையை முடுக்குவதோடு, ஜல்லிக்கட்டை நடத்தும் வகையில் அவசரச் சட்டத்தை உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து காவிரியில் கர்நாடக அரசும், முல்லைப் பெரியாறு பிரச்னையில் கேரள அரசும் அவசரச் சட்டம் பிறப்பித்த நிகழ்வுகளை மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் கவனத்தில் கொள்ள வேண்டும் என வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments: