Friday, October 26, 2007

அடக்குமுறைகளை கண்டு ம.தி.மு.க. துளியும் அஞ்சாது, நாஞ்சில் சம்பத்தை உடனே விடுதலை செய்ய வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை, அக். 25: மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலர் நாஞ்சில் சம்பத் தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டிருப்பதற்கு கட்சியின் பொதுச் செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் 24-ம் தேதி இரவு நடைபெற்ற மதிமுக பொதுக் கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசிக் கொண்டிருந்தபோது திமுக குண்டர்கள் உருட்டுக் கட்டைகள், இரும்புக் குழாய்கள், பெட்ரோல் குண்டுகளோடு உள்ளே நுழைந்து கூட்டத்தில் இருந்தவர்களை அடித்து, விரட்டி மேடையில் பேசிக் கொண்டு இருந்த நாஞ்சில் சம்பத்தையும், மேடையில் இருந்த மதிமுக நிர்வாகிகளையும் தாக்கி உள்ளனர்.

ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் 45 நிமிஷம் நடத்திய இந்தத் தாக்குதலை காவல்துறை தடுக்கவில்லை. வன்முறையாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளனர். இந்தத் தாக்குதலில் நாஞ்சில் சம்பத்தும் மாவட்டச் செயலர் செல்வராகவனும் காயமடைந்தனர். மாவட்ட அவைத் தலைவர் அருள்சாமி பலத்த காயமடைந்தார்.

திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை, ஊழல்களை, காவல்துறையினரின் அராஜகத்தை நாஞ்சில் சம்பத் விமர்சித்து வருவதால் இந்தத் தாக்குதலை திமுகவினர் திட்டமிட்டு நடத்தி உள்ளனர்.

இத்தகைய வன்முறை வெறியாட்டத்தை நடத்திய குண்டர்கள் மீது காவல்துறை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல் குழியும் பறித்ததாம் என்பது போல, நாஞ்சில் சம்பத் மீது பொய் வழக்குப் பதிவு செய்து திண்டுக்கல்லில் அவர் இருந்த இடத்துக்கு வந்து நள்ளிரவு இரண்டு மணி அளவில் கைது செய்து நிலக்கோட்டை நீதிபதி வீட்டுக்குக் கொண்டு சென்று ஆஜர்படுத்தி பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

இதுபோல் இக் கூட்டத்தில் கலந்து கொண்ட மதிமுக நிர்வாகிகள் பலர் மீதும் பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆளுங்கட்சியின் வன்முறைத் தாக்குதல் காவல்துறையின் அடக்குமுறைகளைக் கண்டு மதிமுக துளியும் அஞ்சாது.

எதிர்க்கட்சிகளின் ஜனநாயக உரிமைகளை நசுக்கும் திமுக அரசின் செயல்பாடுகளுக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு கைது செய்யப்பட்ட நாஞ்சில் சம்பத் மற்றும் பிற நிர்வாகிகளை விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று வைகோ வலியுறுத்தி உள்ளார்.

-------------------------------------------
தினமணி செய்தி (26.10.2007)

-------------------------------------------

விகடன் தினசரி செய்தியில் 26.10.2007 அன்று வெளிவந்த வைகோ-வின் அறிக்கை:

அடக்குமுறைகளை கண்டு ம.தி.மு.க. துளியும் அஞ்சாது: வைகோ அறிக்கை

வத்தலக்குண்டு, அக். 26-: அமைச்சர்களை அவதூறாக பேசியதாக ம.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் நேற்று முன்தினம் இரவு ம.தி.மு.க.வின் 14-ம் ஆண்டு பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ம.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசும்போது தி.மு.க. அரசையும், அமைச்சர்களையும் விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது. அப்போது கூட்டத்தில் கலாட்டா ஏற்பட்டது. சோடா பாட்டில்கள்,சேர்கள் வீசப்பட்டன. இதனால் கூட்டம் பாதியில் முடிந்தது. இந்த சம்பவத்தில் ம.தி.மு.க. நிர்வாகிகள் காயம் அடைந்தனர்.


இந்நிலையில் தி.மு.க.வை சேர்ந்த கணேசன் வத்தலக்குண்டு போலீசில் புகார் கொடுத்தார். அதில் வத்தலக்குண்டு ம.தி.மு.க. பொது கூட்டத்தில் பேசிய ம.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத், அமைச்சர்கள் மு.க.ஸ்டாலினையும், இ.பெரியசாமியையும் தரக்குறைவாக பேசினார். அப்போது டீ குடித்துக்கொண்டு இருந்த எங்கள் மீது ம.தி.மு.க.வினர் சேரை எடுத்து வீசியதில் நானும், பாண்டி, கண்ணன், சரவணன், தினேஷ் ஆகியோர் காயம் அடைந்துள்ளோம். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகார் செய்தார்.

அதன்பேரில் வத்தலக்குண்டு போலீசார் நாஞ்சில் சம்பத் மீது அவதூறாக பேசியதாக வழக்குப்பதிவு செய்தனர். திண்டுக்கல்லில் தங்கி இருந்த நாஞ்சில் சம்பத்தை அதிகாலையில் போலீசார் கைது செய்தனர். பிறகு அவர் நிலக்கோட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து நாஞ்சில் சம்பத் மதுரை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இது தொடர்பாக ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் 24-ந் தேதி நடைபெற்ற ம.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் உரையாற்றிக் கொண்டிருந்த போது தி.மு.க.வின் குண்டர்கள் உருட்டுக்கட்டைகள், இரும்புக்குழாய்கள், பெட்ரோல் குண்டுகளோடு உள்ளே தழைந்து, நாஞ்சில் சம்பத்தையும், மேடையில் இருந்த நிர்வாகிகளையும் தாக்கி உள்ளனர்.

இந்த தாக்குதலில் நாஞ்சில் சம்பத்தும், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் செல்வராகவனும் காயம் அடைந்தனர். மாவட்ட அவைத்தலைவர் அருள்சாமி நெற்றியில் பலத்த காயமுற்று மயக்கம் அடைந்து மேடையில் விழுந்து இருக்கிறார். அவரது காயத்துக்கு 7 தையல்கள் போடப்பட்டுள்ளன. வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலையிலும் பலத்த காயம் அடைந்து தையல்போடப்பட்டுள்ளது.

இத்தகைய வன்முறை வெறியாட்டத்தை நடத்திய குண்டர்கள் மீது, போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ம.தி.மு.க.வினர் கொடுத்த புகாரையும், பதிவு செய்ய மறுத்து விட்டனர். நாஞ்சில் சம்பத் வன்முறையை தூண்டியதாக அபாண்டமாக குற்றம்சாட்டி வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இதுபோன்ற வன்முறை, போலீசாரின் அடக்குமுறைகளை கண்டு ம.தி.மு.க. துளியும் அஞ்சாது, சிங்கம் என களத்தில் நிற்கும்.

எதிர்க்கட்சியினரின் ஜனநாயக உரிமைகளை நசுக்குகின்ற அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, நாஞ்சில் சம்பத்தை விடுதலை செய்ய வேண்டும் என்றும், வன்முறையில் ஈடுபட்ட ஆளுங்கட்சி குண்டர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றேன்.

இவ்வாறு வைகோ அறிக்கையில் கூறியிருக்கிறார்.

No comments: