Monday, August 20, 2007

கல்கி புகழ் விழா! வைகோ

தேனில் தோய்த்த பலாவாக, ஆகஸ்ட் 11, தலைநகர் சென்னையில், அனைத்து இந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் கலைமாமணி விக்கிரமன் அவர்கள் ஏற்பாடு செய்த, கல்கி புகழ் விழா அமைந்தது. தியாகராய நகரில் விஜய மகாலில், மாலை சரியாக 5.30 மணிக்கு விழா தொடங்கியது. கல்கி அவர்களின் புதல்வர் கி.இராஜேந்திரன் அவர்களும், கல்கி குடும்பத்தினரும் வந்து இருந்தனர். எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் எதிர்பார்த்ததைவிட ஏராளமாகக் கலந்துகொண்டனர். எழுத்தாளர் கௌதம நீலாம்பரன் அவர்களுக்கு, கல்கி விருது வழங்கினேன்.

எழுத்தாளர் பூவண்ணன் அவர்கள், கல்கியின் ‘தியாகபூமி’ நாவல் குறித்தும், பேராசிரியர் இராஜகோபாலன் அவர்கள் கல்கியின் ‘அலை ஓசை’ நாவல் குறித்தும் உரையாற்றியபின்பு, கல்கியின் 'சிவகாமியின் சபதம்’ எனும்தலைப்பில் என் உரை அமைந்தது.

விழாத் தலைவர் விக்கிரமன் அவர்களின் பெருமுயற்சியில் நடந்தது இந்த விழா. இதற்கு உறுதுணையாக உழைத்தவர், ஆருயிர் இளவல் தஞ்சை உதயகுமார் ஆவார். தமிழ் சரித்திரநாவல்களைத் தீட்டியவர்களின் வரிசையில், முதல் இடம் பெறும். ‘மனுமுறை கண்ட வாசகம்’ என்ற நாவலை எழுதிய வடலூர் வள்ளலார் உள்ளிட்ட வரலாற்றுப் புதினங்களை எழுதியோர் பெயர்கள் அனைத்தையும், இங்கிலாந்தின் வால்டர் ஸ்காட் உள்ளிட்ட மேலைநாட்டுச் சரித்திர நாவல் ஆசிரியர்கள் குறித்தும் முகப்பு உரையாகச் சொல்லி, விடுதலைப் போரில் மூன்று முறை சிறை சென்ற கல்கி அவர்கள், கால்களில் விலங்குக் காப்பும், சங்கிலியும் கட்டப்பட்டு, 14 நாள்கள் சிறையில் அடைபட்ட கொடுமையையும் சொன்னேன்.

கதர் இயக்கத்திலும், கடவுள் நம்பிக்கையிலும் மிக்கஈடுபாடு கொண்டு இருந்த கல்கி அவர்கள், 1947 இல் அன்றைய காலகட்டத்தில் அரசியலில், சமயங்களில் அவரது கருத்துகளுக்கு நேர் எதிரான கருத்துகளைக் கொண்டு இருந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் இலக்கியப் படைப்பைக் குறித்து எவ்வளவு உயர்ந்த மதிப்புக் கொண்டு இருந்தார் என்பது, கல்கிக்குப் புகழ் மகுடம் சூட்டுவது ஆகும். இதோ, அண்ணா அவர்களைப் பற்றிக் கல்கி 1947 டிசம்பரில் கல்கி இதழில் கீழ்கண்டவாறு எழுதினார்.

‘தற்காலத்து நாடகக் கலையைப் பற்றிப் பேசும்போதெல்லாம் ஆங்கிலம் படித்த மேதாவிகள் பெர்னார்ட்ஷாவையும், கிப்சனையும் நினைத்து ஒருகுரல் அழுவது வழக்கம். ‘நாடகம் கீடகம் என்றெல்லாம் பேசிக்கொண்டு இருக்கலாம். ஆனால், ஒரு பெர்னார்ட்ஷாவுக்கும், ஒரு கிப்சனுக்கும் எங்கேபோவது? திருடப் போக வேண்டியதுதான்’ என்றுசொல்வார்கள். அப்படியெல்லாம் திருடவும் கிருடவும் போக வேண்டாம். தமிழ்நாடு நாடக ஆசிரியர் இல்லாமல் பாழ்த்துப் போகவில்லை என்று சமீபத்தில் தெரிந்து கொண்டேன். இரண்டு வாரத்துக்கு முன்பு திருச்சினாப்பள்ளியில் ஓர் இரவு எனும் நாடகத்தைப் பார்க்க நேர்ந்தது. (திருச்சி இரத்தினவேல் தேவர் மண்டபத்தில், நடிப்பிசைப்புலவர் கே.ஆர். இராமசாமி நாடகக்குழுவினர், அறிஞர் அண்ணாவின் ஓர் இரவுநாடகத்தை நடத்தினர். 15.11.1947 அன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்குக் கல்கி தலைமைஏற்றார்.) பார்த்ததன் பயனாக, இதோ ஒரு பெர்னார்ட்ஷா தமிடிநநாட்டில் இருக்கிறார். கிப்சனும் இருக்கிறார். இன்னும் கால்ஸ் வொர்த்தியும்கூட இருக்கிறார் என்று தோன்றியது. நடிக்கக்கூடிய நாடகத்தை எழுதும் ஆற்றல் மிகவும் அரியது. அந்த ஆற்றல், திரு. அண்ணாத்துரையிடம் பூரணமாக அமைந்து இருக்கிறது என்பதை ஓர் இரவு நாடகத்தில் கண்டு மகிழ்ந்தேன்.’’ என்று எழுதினார்.

‘மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்’ எனக்கூறிய அண்ணா அவர்கள், கல்கி அவர்களைப் பற்றிக் குறிப்பிடுகையில், 'சரித்திர நவீனங்களின்பால், சமையல்கட்டுகளும் திரும்பிப் பார்க்கச் செய்தவர்’ என்றார்.

1932 ஆம் ஆண்டு, ஒருநாள் மாலை நேரத்தில் மாமல்லபுரத்துக் கடற்கரையில், அமர்ந்து இருந்தபோது, ரசிகமணி டி.கே.சி. அவர்கள், ‘விதியின் எழுத்தைக் கிழித்தாச்சு, விட்ட குறை வந்து தொட்டாச்சு’ எனக் கூறிய கோபாலகிருஷ்ண பாரதியாரின் கவிதை வரிகள் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம்தான், 1300 ஆண்டுகளுக்கு முன்னர், இந்த மாமல்லபுரத்தில், அற்புதமான சிலைகள் வடிக்கப்பட்ட காலமும், மகேந்திரவர்மர், நரசிம்மவர்மர் பற்றிய எண்ணமும், அதனால் என் மனதில் எழுந்தகனவுகளும், 12 ஆண்டுகள் கழித்து ‘சிவகாமியின் சபத’மாக உருப்பெற்றது எனத் தெரிவித்த கல்கி அவர்களின் சிவகாமியின் சபதம், காதலும் வீரமும் தமிழர் மானமும், கலையும், சிகரத்தின் உச்சியில் ஒளிதந்த காட்சிகளின் உயிர் ஓவியம்தான் என்பதை இரண்டு மணி நேரம் விரிவாகப் பேசினேன். நிகழ்ச்சிக்கு வந்தோரில் பெரும்பாலோர், நம் இயக்கத்துக்கு அப்பாற்பட்டவர்கள். கடைசிவரை ஒருவர்கூட அசையவில்லை. ஈடுபாட்டுடன் கேட்டனர் என்பது பெருமிதம் அளிக்கிறது. ‘பொன்னியின் செல்வன்’ உரையையும், ‘சிவகாமியின்சபதம்’ உரையையும் ஒரு நூலாக ஆக்கிட எண்ணிஉள்ளேன்.

எழுச்சிச் சங்கொலிக்கும் உங்கள் பணிகள்வளரட்டும்!

பாசமுடன்

வைகோ

No comments: