பால் தாக்ரே போர்க் குரல் எழுப்பி
பகை அணிக்குப் பச்சைக் கொடி காட்டியபோது
பச்சைத் தமிழா, நீ ஏன்
பாண்டிய மைந்தனைக் கொச்சைப்படுத்தினாய்!
அண்ணாவின் இதயத்தை
இரவலாகப் பெற்றதாகக் கூறிக்கொள்வோரே
இதுதான் உம் இன உணர்வா?
அண்ணா! அண்ணா! என்று
அடுக்கு மொழிபேசி, அரியணை ஏறி,
அன்னைத் தமிழ் மக்களை அடமானம் வைத்தவரே
அவமானம் இல்லையோ - காஞ்சி
அண்ணன் பெயர் உச்சரிக்க!
தமிழ், தமிழன் என்று தம்பட்டம் அடித்துவிட்டு
தமிழனைத் தலைகுனிய வைத்ததன்
மானம் இல்லாத தமிழ் இனத் துரோகியே!
பெண், பொன் என்று பிரதிபாவை
பெருமை பேசி, பேரணி நடத்திக் காட்டி
தமிழ் மண்ணில் உதித்திட்ட - அறிவுப்
பெட்டகத்தை அலட்சியப்படுத்திய
கொள்கையற்ற கொற்றவரே!
கோடானுகோடி தமிழரை விற்றவரே!
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா - என்ற வீர வரிகளை
தகனம் செய்துவிட்டு
மராட்டி என்று சொல்லடா
மனம் மகிடிநந்து நில்லடா என்று
மார்தட்டி நின்றவரே!
மானம் இல்லையோ! - உமக்கு
மறத்தமிழன் என்று சொல்வதற்கு
காலம் கட்டாயம் பதில் சொல்லும்
கலாமை காயப்படுத்திய கயமைத்தனத்துக்கு!
___________________________________________________
இந்த கவிதை எஸ். ஜோயல் (தூத்துக்குடி மாவட்ட கழகப் பொறுப்புக் குழுத் தலைவர்) அவர்கள் சங்கொலி 03.08.2007 இதழில் எழுதியது.
No comments:
Post a Comment