Saturday, August 18, 2007

இலக்கியத்தில் இளைப்பாறி...

‘‘தாவி வரும் கடல் அலைகளை எண்ணிவிடலாம்; நட்சத்திரங்களை எண்ணிவிடலாம்; கடற்கரை மணலைக்கூட எண்ணிவிடலாம்; கடலுக்குள் துள்ளிக் குதிக்கும் மீன்களின் எண்ணிக்கையைக்கூடச் சொல்லிவிடலாம். ஆனால், இந்த திருத்தொண்டர் புராணத்தின் பெருமையை சேக்கிழார் தவிர வேறு எவராலும் சொல்ல முடியாது!’’

அக்னி வெயிலாகத் தகிக்கும் அரசியலுக்கு நடுவே, கலைஞருக்கு மட்டுமல்ல... வைகோவுக்கும் இலக்கியம்தான் இளைப்பாறல்! சமீபத்தில் சிதம்பரத்தில் வைகோ ஆற்றிய ஆன்மிகச் சொற்பொழிவு ஆச்சர்யப் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. திருத்தொண்டர் புராணத்தைப் பற்றிய அவரது பேரருவிப் பேச்சில் இருந்து ஒரு சாம்பிள் இங்கே...

‘‘தொல்காப்பியத்தில், திருக்குறளில், கம்பன் காவியத்தில், வளையாபதியில், திருமுருகாற்றுப்படையில் எல்லாம் உலகம் என்ற சொல்லை முன்வைத்து தான் தொடங்கி இருக்கிறார்கள் தமிழர்கள். ‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கறியவன்...’ என்றுதான் தொடங்குகிறார் சேக்கிழாரும்! முடிக்கும் போதும், ‘உலகெலாம்’ என்று முடிக்கிறார். ‘உலகெலாம்...’ எனத் தொடங்கினாலும், தன் தாய் மண்ணின் பெருமையைச் சொல்ல மறக்கவில்லை சேக்கிழார்.

இமயத்தின் உச்சியிலேயே புலிக் கொடியைப் பதித்த சோழ நாட்டின் பெருமையை ‘நீர் நாடு’ என்கிறார். அதாவது, தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நாடு என்று அர்த்தம். அடுத்து, திருவாரூர் நகரத்தின் பெருமையையும், தமிழர்கள் போற்றி வளர்த்த பண்பாட்டு நெறியையும், பசுவுக் காக தன் ஒரே பிள்ளையைப் பலிகொடுத்த மனுநீதியின் வாழ்க்கையையும் சொல்கிறார். அனைவரும் சட்டத்துக்கு முன் சமம் என்று ஜனநாயகத்தை உலகத்துக்கு அளித்த சமூக நீதியைச் சொல்கிறார்.

பெரிய புராணத்தின் மையமாக விளங்குபவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள். தமிழுக்குத் தொண்டு செய்ய வந்த சுந்தரமூர்த்தி சுவாமிகளின் அகவியலை சேக்கிழார் அவ்வளவாக எழுதவில்லை. ஆனால், ஆலயத்தில் நுழைகிற வேளையில் பரவையர் பார்வையில்பட்ட பிறகு, சுந்தரமூர்த்தியின் இதயத்தில் எழுகின்ற உணர்வுகளை சேக்கிழார் சித்திரிக்கும் விதம் கவிதை நயம்’’ என்று சுந்தரமூர்த்தி சுவாமிகளின் வரலாற்றை சிம்மக் குரலில் சொல்லிச் சிலிர்க்கிறார் வைகோ.

‘‘சேக்கிழார் பற்றிப் பேசுகிறேனே, ஆன் மிகத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டுவிட் டேனோ என எண்ண வேண்டாம். தமிழை உயிராக நேசிக்கிறோம்; தமிழைப் பெருமைப்படுத்தியவர்களை நேசிக்கிறோம். அதனால், சேக்கிழாரையும் நேசிக்கிறேன்’’ என்று சொல்லிக் கைத்தட்டல்களை அள்ளிச் சென்றார் வைகோ.

அரசியலோ, இலக்கியமோ... கறுப்புத் துண்டைத் தோளில் முறுக்கிக்கொண்டு நெருப்பாகப் பொறியும் வைகோவுக்கு பேச் சிலும் மூச்சிலும் துளியும் குறையவில்லை நம்பிக்கை!

--------------------------------------------------------
நன்றி: ஆனந்த விகடன் (15.08.2007 இதழ்)

No comments: