Monday, January 14, 2008

ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம்: வைகோ

சென்னை, ஜன. 13: ஜல்லிக்கட்டை நடத்தும் வகையில் தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.

இது தொடர்பாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை வைகோ வெளியிட்ட அறிக்கை:

ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் புறநானூற்றுக் காலத்தில் இருந்தே தொன்றுதொட்டு நடைபெற்று வரும் தமிழர்களுக்கே உரிய வீரக்கலை.
அலங்காநல்லூரில் நடைபெறுகிற ஜல்லிக்கட்டில், காளைகள் ஆயுதங்களால் தாக்கப்படுவது இல்லை -வேறு எந்த ஊறும் நேர்வது இல்லை. பங்கேற்கும் வீரக் காளையர் காயமடைவதும், சில வேளைகளில் சிலரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதும் எந்த வீரப் போட்டியிலும் நடக்கக் கூடிய ஒன்றுதான்.

இந்தக் காரணத்தை அடிப்படையாகக் கொண்டால், கார் பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்பவர்களுக்கு ஆபத்துகள் ஏற்படுகின்றன. மது விருந்துக் கேளிக்கைகளும், மேற்கத்தியக் கலாசாரமும் தமிழர் பண்பாட்டை, நாகரிகத்தை சிதைத்துச் சின்னாபின்னம் செய்து கொண்டு இருக்கின்றன. இன்றைய சூழலில், தமிழர்களின் கலாசாரத்தை, பண்பாட்டை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற வேண்டும்.

இதற்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டில் தடை விதித்தவுடன், அதை எதிர்கொள்ள உரிய காலத்தில் தகுந்த நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ளத் தவறியது. இதன் விளைவாகவே தைப்பொங்கல் பண்டிகை வேளையில் இந்த அதிர்ச்சியைத் தமிழகம் சந்திக்க நேர்ந்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் முடிவை மறு ஆய்வு செய்யும் நடவடிக்கையை முடுக்குவதோடு, ஜல்லிக்கட்டை நடத்தும் வகையில் அவசரச் சட்டத்தை உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து காவிரியில் கர்நாடக அரசும், முல்லைப் பெரியாறு பிரச்னையில் கேரள அரசும் அவசரச் சட்டம் பிறப்பித்த நிகழ்வுகளை மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் கவனத்தில் கொள்ள வேண்டும் என வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு: வைகோ கண்டனம்

சென்னை, ஜன. 13: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து பிரதமருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் அனுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதம்:

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த நமது மீனவர்கள் தனுஷ்கோடி அருகில் இந்தியக் கடல் எல்லைக்கு உள்ளே சனிக்கிழமை மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். நண்பகல் 1 மணி அளவில் அங்கே வந்த இலங்கை கடற்படையினர், கண்மூடித்தனமாக நமது மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் சேகர் என்பவர் குண்டுக்காயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் கொடுப்பது முதல் அனைத்து உதவிகளையும் செய்து, தமிழ் இனத்தை முற்றிலுமாக அழித்து ஒழிக்கும் சிங்கள இனவாத அரசின் நடவடிக்கைகளுக்கு ஐக்கிய முன்னணி அரசு துணைபோகிறது என்று நான் குற்றம் சாட்டுகிறேன். இந்தியக் குடிமக்களாகிய தமிழக மீனவர்களைப் பாதுகாக்கும் கடமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தவறி விட்டது என்பதை நான் மிகுந்த வருத்தத்துடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை நடத்தி வருகின்ற தாக்குதலை உடனடியாகத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பதுடன், இலங்கை அரசை எச்சரிக்க வேண்டும் என்றும் மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொள்கிறேன் என்று அந்தக் கடிதத்தில் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

Friday, January 11, 2008

வைகோ உண்ணாவிரதம். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்பு


துத்துக்குடி : கோவில்பட்டியில் நடந்த உண்ணாவிரதத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றதால் வைகோ உற்சாகமடைந்தார்.
தமிழகத்தில் நிலவும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, உரத்தட்டுப்பாடு போன்றவற்றை கண்டித்தும் , நெல்லுக்கு குவிண்டாலுக்குரிய விலை வழங்கவேண்டுமென்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி துõத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ம.தி.மு.க., சார்பில் நேற்று உண்ணாவிரதம் நடந்தது. உண்ணாவிரதத்திற்காக இனாம்மணியாச்சி ரோட்டில் கோட்டை முகப்பில் வளைவுடன் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. 9 மணிக்கு துவங்குவதாக இருந்த உண்ணாவிரதத்திற்கு ம.தி.மு.க.,பொதுச்செயலாளர் வைகோ காலை 8.30 க்கே வந்துவிட்டார்.உண்ணாவிரதத்தில் கட்சியின் துணைப்பொதுச் செயலாளர்கள் நாசரேத்துரை, மல்லை சத்யா, மாவட்ட செயலர்கள் துõத்துக்குடி ஜோயல், நெல்லை சரவணன், நெல்லை மாநகர செயலாளர் நிஜாம், கோவை மாரியப்பன், திருச்சி நடராஜன், மதுரை பூமிநாதன், ராமநாதபுரம் நென்மேனி ஜெயராமன், விருதுநகர் சண்முகசுந்தரம், தென்சென்னை வேளச்சேரி மணிமாறன், வடசென்னை ஜீவன், கொள்கை விளக்க செயலாளர் நாஞ்சில்சம்பத், சிவகாசி எம்.பி.,ரவிச்சந்திரன், எம்.எல்.ஏ.,க்கள் சிவகாசி ஞானதாஸ், விருதுநகர் வரதராஜன், திருமங்கலம் வீரஇளவரசன், வாசுதேவநல்லுõர் சதன்திருமலைக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காலையில் இருந்தே தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருந்ததால் உண்ணாவிரத பந்தல் போதாமல் அருகருகே புதிய பந்தல்கள் அமைக்கப்பட்டன. அதிலும் இடம் கிடைக்காமல் எதிரே இருந்த பாலத்தின் கீழ் நிழலில் தொண்டர்கள் அமர்ந்தனர். உண்ணாவிரதத்தில் ஏராளமான பெண்களும் பங்கேற்றனர். வைகோ உற்சாகமடைந்து தொண்டர்கள், நிர்வாகிகளை எழுந்து நின்று வரவேற்று உட்கார வைத்தார்.


தமிழகத்தில் நிகழும் மின்வெட்டு, உரத்தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்னைகளை கண்டித்து கோவில்பட்டியில் ம.தி.மு.க.,நடத்திய உண்ணாவிரதத்தில் வைகோ பேசியதாவது:மின்வெட்டினால் விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவ, மாணவிகள் என அனைத்துதரப்பினரும் பாதிக்கப்படுகிறார்கள். முதல்வர், அமைச்சர்கள் இருக்கிற சென்னையில் மட்டும் மின்வெட்டு இல்லை. மின்நிலையங்களை முறையாக பராமரிக்காததாலும் திட்டமிட்டு செயல்படாததாலும் மின்சார துறையில் காலிப்பணியிடங்களை நிரப்பாததாலும்தான் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.துõத்துக்குடி ஸ்பிக், மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் ஆகிய நிறுவனங்கள் உரம் உற்பத்தியை நிறுத்திவிட்டன. தற்போது வந்துள்ள யூரியாக்களை பயன்படுத்தினால் பயிர் பாழாகிவிடுகிறது. பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு சிறுகுறு விவசாயிகள் என வித்தியாசம் பார்க்காமல் அவர்களுக்கு 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டஈடு வழங்க வேண்டும். இந்த ஆண்டு திடுக்கிடும் அரசியல் மாற்றங்கள் நிகழஉள்ளன இவ்வாறு வைகோ பேசினார்.

Saturday, December 29, 2007

வைகோ எடைக்கு இரு மடங்கு எடை வெள்ளி கட்டி பரிசு


சென்னை: "புத்தாண்டில், பார்லிமென்ட் தேர்தல் வரும்,'' என்று ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேசினார்.

வைகோவின் நாற்பது ஆண்டு கால பொது வாழ்க்கையை பாராட்டிஅவருக்கு எடைக்கு இரு மடங்கு எடை வெள்ளிக் கட்டிகள் வழங்கும் விழா பொதுக் கூட்டம் தென் சென்னை ம.தி.மு.க., சார்பில் வேளச்சேரியில் நடந்தது. மாவட்டச் செயலர் மணிமாறன் தலைமை வகித்தார். மேடையில் வைக்கப்பட்டிருந்த பெரிய தராசில் வைகோ உட்கார வைக்கப்பட்டார். இன்னொரு தட்டில் அவரது எடைக்கு இரு மடங்கு வெள்ளிக் கட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டன. வைகோ 25 முறை சிறை சென்றதை நினைவு கூறும் வகையில் அவருக்கு 25 சவரன் தங்க சங்கிலியும் அணிவிக்கப்பட்டது. கூட்டத்தில், வைகோ பேசியதாவது:

எனக்கு வெள்ளி, தங்கம் தரும் விழாவில் பங்கேற்க மறுத்தேன். ஆனால், மணிமாறன் போன்ற தம்பிகள் மனம் புண்படக் கூடாது என்பதற்காக ஒப்புக் கொண்டேன். இங்கே பேசியவர்கள் எனக்கு எடைக்கு எடை தங்கம், கோமேகம் தருவதாக சொன்னார்கள். அதையெல்லாம் நான் விரும்புவதில்லை. நான் தங்கத்தை அணிவதில்லை. எனது பொது வாழ்க்கையை பாராட்டி தராசில் உட்கார வைத்தீர்கள். என்னை பொருத்தவரை உங்கள் இதயத்தில் நான் அமர்ந்ததாக கருதுகிறேன். உங்களுக்கு என் உயிர் உள்ள வரை அன்பும் பாசமும், உழைப்பும் மட்டும் தான் தரமுடியும். இப்போது, பதவிகள் உங்களுக்கு தரமுடியாமல் இருக்கலாம். காலம் கருணை காட்டும். நமக்கும் காலம் வரும். உங்களுக்கு கிடைக்க வேண்டியதெல்லாம் கிடைக்கும். தமிழர்களின் நலம் காக்கும் கொள்கையிலும், நீதி நிலைநாட்டுவதிலும் நாம் உறுதியாக இருக்கிறோம். கடந்த 13 ஆண்டுகளாக பல துன்பம், துயரத்தை கடந்து வந்து விட்டோம். பதவிகள் நிரந்தரமான புகழை தராது. தியாகம் மட்டும் நிரந்தரமான புகழை தரும். புத்தாண்டில் நிச்சயம் தேர்தல் வரும். அதில் தி.மு.க., ஆட்சி துõக்கி எறியப்படும். இவ்வாறு வைகோ பேசினார்.

தலைமை நிலையச் செயலர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், துணைப்பொதுச்செயலர் மல்லை சத்யா, கொள்கை பரப்பு செயலர் நாஞ்சில் சம்பத், பகுதி செயலர் சு.செல்வபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏழை பெண்களுக்கு ஐந்து கிலோ அரிசி பைகள், 500 பெண்களுக்கு இலவச புடவைகள், பத்து ஊனமுற்றோருக்கு சைக்கிள்கள், இஸ்திரி பெட்டிகள், தையல் மிஷின்கள் ஆகியவற்றை வைகோ வழங்கினார்.

திருப்பூரில் ஆக்கிரமிப்பு அகற்ற மதிமுக கவுன்சிலர்கள் கோரிக்கை

கோவை, டிச. 28: திருப்பூர் நகரில் போக்குவரத்து நெரிசலைப் போக்க நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக கவுன்சிலர்கள் கோரியுள்ளனர்.

முதல்வர் கருணாநிதிக்கு கவுன்சிலர்கள் சிவபாலன், தம்பி கோவிந்தராஜ், சாந்தாமணி, கலாமணி சுந்தரம், பரமேஸ்வரி சண்முகம் ஆகியோர் கடிதம் அனுப்பியுள்ளனர். கடிதத்தின் நகலை நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் முபெ சாமிநாதன், ஆட்சியர் நீரஜ் மித்தல் ஆகியோருக்கும் அனுப்பியுள்ளதாக சிவபாலன் தெரிவித்தார்.

திருப்பூர் நகரில் அனைத்துப் பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் விபத்துகளைத் தவிர்க்கவும் சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கடிதத்தில் கோரியுள்ளனர்.

விரைவில் தேர்தல் நடைபெறும்: வைகோ பேச்சு

சென்னை, டிச.29-: மத்தியிலும், மாநிலத்திலும் விரைவில் தேர்தல் வரும் என்று வைகோ கூறினார்.

தென்சென்னை மாவட்ட ம.தி.மு.க. சார்பில் ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோவின் 40 ஆண்டுகால பொதுவாழ்க்கையை பாராட்டி அவருடைய எடைக்கு இருமடங்கு வெள்ளிக்கட்டிகள் பரிசளிக்கும் விழா வேளச்சேரியில் நடைபெற்றது. நலத்திட்ட உதவிகளை வழங்கி வைகோ பேசியதாவது:-

ம.தி.மு.க. தமிழக அரசியலில் இருந்து அழிக்க முடியாதது என்று நிரூபிக்கும் வகையில் இந்த விழா நடக்கிறது. இந்த தங்கசங்கிலியும், வெள்ளிக்கட்டிகளும் ம.தி.மு.க. நிதிக்கணக்கில் வைக்கப்படும். கட்சி தொண்டர்களின் இந்த உழைப்புக்கு என் ஜீவன் இருக்கும் வரை என்னுடைய உழைப்பு, பாசம், அன்பை தருகிறேன்.

தமிழகத்தில் இருக்கும் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதா? ஒரு பக்கம் முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை அச்சுறுத்துகிறது. அதற்கு தீர்வு உண்டா? அந்த பிரச்சினையில் கருணாநிதி தமிழக மக்களை ஏமாற்றி வருகிறார். பாலாறு, காவிரி பிரச்சினையிலும் தமிழர்களின் உரிமையை காவுகொடுத்து விட்டார்.
அறிவிக்கப்படாத மின்வெட்டால் விவசாயிகள், மாணவர்கள் என்று அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகிறார்கள்.

இலங்கையில் ஒவ்வொரு நாளும் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். செஞ்சோலை என்ற இடத்தில் 61 குழந்தைகள் துடிக்க, துடிக்க இலங்கை விமானப்படையின் குண்டு வீச்சில் படுகொலை செய்யப்பட்டார்கள். அதற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவிக்காதது ஏன்?
இந்த கொடுமைகளுக்கு பிறகும் இலங்கையுடன் ராணுவ ஒப்பந்தம் செய்யாதீர்கள் என்று சொன்னோம். ஆனால் கையெழுத்து போடாமலேயே ராணுவ உதவிகளை, ரேடார் கருவிகளை வழங்கி இருக்கிறார்கள்.

இந்திய கடற்படை தளபதி, தமிழக மீனவர்களை இலங்கை கப்பற்படையினர் தாக்கியதே கிடையாது என்று கூறியிருக்கிறார். ஆனால் ஆயிரம் தடவை துப்பாக்கி சூடு நடத்தியிருக்கிறார்கள். இந்திய கடற்படை, இலங்கை கடற்படைக்கு வேவு பார்க்கிறது. ஐ.நா சபையின் அலுவலகத்தை இலங்கையில் திறக்க வேண்டும் என்ற தீர்மானத்துக்கு எதிராக இந்தியா வாக்களித்திருப்பது வெட்கக்கேடான விஷயம்.

தற்போது நடந்து கொண்டிருக்கும் மக்கள் விரோத அரசை எதிர்த்து களத்தில் நிற்க வேண்டும். இந்த இருள் விலக வேண்டும். 2008 கோடை மாதத்தை மத்திய அரசு தாண்டாது. கூட்டணிக்குள்ளும் குத்துவெட்டு தொடங்கி விட்டது. இந்த அரசுகள் கவிழும். அ.தி.மு.க.வுடன் இணைந்து அடுத்த தேர்தலை சந்திக்க தயாராவோம்.
இவ்வாறு வைகோ பேசினார்.

Saturday, December 8, 2007

முல்லைப் பெரியாறு: மதுரையில் வைகோ உண்ணாவிரதம்

வெள்ளிக்கிழமை, டிசம்பர் 7, 2007

மதுரை: திமுக அரசு ஆடம்பர விழாக்களை நடத்தி மின்சாரத்தை கபளீகரம் செய்ய பார்க்கிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.


முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத கேரள அரசை கண்டித்தும், இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் இன்று மதிமுகப் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் 800க்கும் மேற்பட்ட மதிமுகவினர் மதுரை, தல்லாகுளத்தில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன் உண்ணாவிரத போராட்டம் இருந்தனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் நிறுவனரும், தலைவருமான டாக்டர் என். சேதுராமனும் கலந்து கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது,

தமிழகத்தில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மின்சார வெட்டு மக்களை வாட்டி எடுத்துக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகி வருகின்ற விவசாயிகளால் விவசாயம் செய்ய முடியவில்லை. தொழிற்சாலைகள் முடங்கி கிடக்கின்றன.

தொழிற்சாலைகள், ஜெனரேட்டர்கள் மூலம் இயங்க வேண்டியிருப்பதால் யூனிட்டுக்கு ரூ. 4.50 செலவிட வேண்டிய தொழிற்சாலைகள் ரூ.15 செலவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக மாணவ-மாணவிகள் இரவு நேரங்களில் படிக்க முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.

மின்சார நிலையங்கள் பராமரிப்பு இல்லாமல் இருப்பதை 3 மாதங்களுக்கு முன்னரே அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா எடுத்துக் கூறி தமிழகத்தில் மின் பற்றாக்குறை இருப்பதை சுட்டிக் காட்டினார். அப்போது தமிழகத்தில் மின்வெட்டே கிடையாது என்று ஆற்காடு வீராசாமி ஓங்கி கூறினார்.

மக்களின் நம்பிக்கையை இழந்துவரும் திமுக அரசு ஆடம்பர விழாக்களை நடத்தி இன்னமும் மக்கள் செல்வாக்கு இருப்பதாக காட்டிக் கொள்ள முயற்சி செய்கிறது. ஆடம்பர விழாக்கள் மூலம் மின்சாரத்தை கபளீகரம் செய்ய பார்க்கிறது.

டை அமோனியம் பாஸ்பேட் போன்ற உரங்களின் விலை அதிகமாகி கள்ள சந்தையில் விற்கப்படுகிறது. இந்த உரங்களை விவசாயிகள் வாங்க முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

மின்வெட்டை கண்டித்தும், விவசாயிகள் நெல்விலை குவிண்டாலுக்கு (100 கிலோ) ரூ.1,000 வழங்கக் கோரியும், உர விலையை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்தும் மதிமுக மிகப்பெரிய போராட்டம் நடத்த இருக்கிறது. இன்னும் ஓரிரு நாட்களில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்றார் வைகோ.

http://thatstamil.oneindia.in/news/2007/12/07/tn-power-wastage-for-dmk-functions-vaiko.html