சென்னை, டிச.29-: மத்தியிலும், மாநிலத்திலும் விரைவில் தேர்தல் வரும் என்று வைகோ கூறினார்.
தென்சென்னை மாவட்ட ம.தி.மு.க. சார்பில் ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோவின் 40 ஆண்டுகால பொதுவாழ்க்கையை பாராட்டி அவருடைய எடைக்கு இருமடங்கு வெள்ளிக்கட்டிகள் பரிசளிக்கும் விழா வேளச்சேரியில் நடைபெற்றது. நலத்திட்ட உதவிகளை வழங்கி வைகோ பேசியதாவது:-
ம.தி.மு.க. தமிழக அரசியலில் இருந்து அழிக்க முடியாதது என்று நிரூபிக்கும் வகையில் இந்த விழா நடக்கிறது. இந்த தங்கசங்கிலியும், வெள்ளிக்கட்டிகளும் ம.தி.மு.க. நிதிக்கணக்கில் வைக்கப்படும். கட்சி தொண்டர்களின் இந்த உழைப்புக்கு என் ஜீவன் இருக்கும் வரை என்னுடைய உழைப்பு, பாசம், அன்பை தருகிறேன்.
தமிழகத்தில் இருக்கும் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதா? ஒரு பக்கம் முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை அச்சுறுத்துகிறது. அதற்கு தீர்வு உண்டா? அந்த பிரச்சினையில் கருணாநிதி தமிழக மக்களை ஏமாற்றி வருகிறார். பாலாறு, காவிரி பிரச்சினையிலும் தமிழர்களின் உரிமையை காவுகொடுத்து விட்டார்.
அறிவிக்கப்படாத மின்வெட்டால் விவசாயிகள், மாணவர்கள் என்று அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகிறார்கள்.
இலங்கையில் ஒவ்வொரு நாளும் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். செஞ்சோலை என்ற இடத்தில் 61 குழந்தைகள் துடிக்க, துடிக்க இலங்கை விமானப்படையின் குண்டு வீச்சில் படுகொலை செய்யப்பட்டார்கள். அதற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவிக்காதது ஏன்?
இந்த கொடுமைகளுக்கு பிறகும் இலங்கையுடன் ராணுவ ஒப்பந்தம் செய்யாதீர்கள் என்று சொன்னோம். ஆனால் கையெழுத்து போடாமலேயே ராணுவ உதவிகளை, ரேடார் கருவிகளை வழங்கி இருக்கிறார்கள்.
இந்திய கடற்படை தளபதி, தமிழக மீனவர்களை இலங்கை கப்பற்படையினர் தாக்கியதே கிடையாது என்று கூறியிருக்கிறார். ஆனால் ஆயிரம் தடவை துப்பாக்கி சூடு நடத்தியிருக்கிறார்கள். இந்திய கடற்படை, இலங்கை கடற்படைக்கு வேவு பார்க்கிறது. ஐ.நா சபையின் அலுவலகத்தை இலங்கையில் திறக்க வேண்டும் என்ற தீர்மானத்துக்கு எதிராக இந்தியா வாக்களித்திருப்பது வெட்கக்கேடான விஷயம்.
தற்போது நடந்து கொண்டிருக்கும் மக்கள் விரோத அரசை எதிர்த்து களத்தில் நிற்க வேண்டும். இந்த இருள் விலக வேண்டும். 2008 கோடை மாதத்தை மத்திய அரசு தாண்டாது. கூட்டணிக்குள்ளும் குத்துவெட்டு தொடங்கி விட்டது. இந்த அரசுகள் கவிழும். அ.தி.மு.க.வுடன் இணைந்து அடுத்த தேர்தலை சந்திக்க தயாராவோம்.
இவ்வாறு வைகோ பேசினார்.
No comments:
Post a Comment