பாரக் ஒபாமா!
வட துருவமாம் அலாஸ்காவில் தொடங்கி, மேற்கே பசிபிக் கடற்கரையில் இருந்து, கிழக்கில் அட்லாண்டிக் கடல் ஓரம் வரை - அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மூலை முடுக்கெல்லாம் எதிரொலிக்கும் சொற்கள் ‘‘ஆம்; நம்மால் முடியும் - Yes; We Can" ஒரு பிரளயத்தின் ஆவேசத்தை உள்ளடக்கிய சொற்கள் அவை! அனைத்து உலகத்தின் கவனத்தைக் கவர்ந்து ஈர்க்கும் காந்தக் கல்லாகிய சொற்கள்.
வட துருவமாம் அலாஸ்காவில் தொடங்கி, மேற்கே பசிபிக் கடற்கரையில் இருந்து, கிழக்கில் அட்லாண்டிக் கடல் ஓரம் வரை - அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மூலை முடுக்கெல்லாம் எதிரொலிக்கும் சொற்கள் ‘‘ஆம்; நம்மால் முடியும் - Yes; We Can" ஒரு பிரளயத்தின் ஆவேசத்தை உள்ளடக்கிய சொற்கள் அவை! அனைத்து உலகத்தின் கவனத்தைக் கவர்ந்து ஈர்க்கும் காந்தக் கல்லாகிய சொற்கள்.
‘முடியாது என்ற சொல்லுக்கு என் அகராதியில் இடம் இல்லை’ என முழங்கிய மாவீரன் நெப்போலியன்கூட, செயிண்ட் எலினாவில் முடங்கிப் போனான். கற்பனைக்கும் எட்டாத சாதனைகளைத் தங்கள் பெருமுயற்சியால் சாதித்துக் காட்டியோர் பலர் சரிதத்தில் உண்டு. ஆனால், அரசியல் அரங்கத்தில் நினைத்துக்கூடப் பார்க்க இயலாத அதிசயம் ஒன்று அரங்கேறிக் கொண்டு இருக்கிறது, அமெரிக்க நாட்டின் அரசியல் களத்தில்!
நூற்றாண்டுகளாகக் கட்டப்பட்ட சிந்தனை அரண்களைத் தகர்த்து, மாற்றத்துக்கு முடிசூடுவதுதான் புரட்சி. போர்பூமிகளில் - இரத்த ஆறுகளின் கரைகளில் - அத்தகைய புரட்சிகள் - பிரெஞ்சு நாட்டில், பின்னர் சோவியத் ரஷ்யாவில், செஞ்சீனத்தில், இப்படிப் பலப்பல!
ஆனால், அமெரிக்காவில் இன்று நடப்பது, மனிதகுலம் இதுவரை சந்தித்து இராத அபூர்வக் காட்சி! ஒருக்காலும் எது நடக்காது, ஒருபோதும் எது நடவாது என உலகம் நினைத்ததோ, அது நடக்கிறது அங்கே. இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால், ஏன் - நூறு ஆண்டுகளுக்கு முன்னால், இப்பொழுது அமெரிக்காவில் அரங்கேறும் காட்சிகள் நடப்பதாக ஒருவன் சொன்னால், கைகொட்டி நகைத்து இருப்பர்.
சூரியன் மேற்கில் உதிக்கிறான்; வடதுருவமும், தென்துருவமும், தழுவிச் சங்கமித்தன; எருக்கஞ்செடியில் முல்லை பூக்கிறது; கடல்நீர் தித்திக்கிறது; இதைக்கூட நம்புவோம். ஆனால், வெள்ளை மாளிகையில் - அதிபர் நாற்காலியில், ஒரு கருப்பு மனிதனா? கனவிலும் நடவாது - கற்பனையிலும் கூடாது; இப்படித்தான் கூறி இருப்பர். ஆனால், கனவுக்கும், கற்பனைக்கும் எட்டாத அரசியல் அதிசயம் உண்மையாகிக் கொண்டு இருக்கிறது.
இருண்ட ஆப்பிரிக்கக் கண்டத்தின், கென்யா நாட்டின், கருப்பு நீக்ரோவின் மகன் - அமெரிக்க மண்ணின் மைந்தனாகவே பிறக்கிறான் ஆனலூலுவில். அக்கருப்பு நித்திலம், உலகுக்குக் கிடைத்த நாள் 1961 ஆகஸ்ட் 4. மனிதகுலம் எத்தனையோ விசித்திரங்களைத் தன் பயணத்தில் சந்திக்கிறது. அப்படி ஓர் அடையாளம்தான் இந்த மனிதனும். காலத்தால் ஆசீர்வதிக்கப்படுகிறான். அப்படித்தான் அவன் பெயரும் அமைந்து உள்ளது. இன்றைக்கு உலகில் அதிக உதடுகள உச்சரிக்கும் பெயர் - ‘‘பாரக் ஒபாமா’’ ‘பாரக்’ என்ற சொல்லின் எபிரேய வேர்ச்சொல்லுக்கு - ‘ஆசீர்வதிக்கப்பட்டவன்’ என்று பொருள்.
யார் இந்த பாரக் ஒபாமா?
அவர்தான் 2008 ஆம் ஆண்டு நவம்பர் நான்காம் நாள் நடைபெற இருக்கின்ற அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட, உட்கட்சித் தேர்தல் களத்தில் நிற்கிறார். பிரமிப்பு - பரபரப்பு - திகைப்பு - மலைப்பு - வியப்பு - எதிர்பார்ப்பு - இத்தனையும் அவர் பெயரைச் சுற்றியே சுழல்கின்றன - அமெரிக்கா முழுமையும்!
வெள்ளை மாளிகையிலா? அங்கே மகுடபதியாக ஒரு கருப்பரா? மேற்கில் தோன்றும் உதயம் அன்றோ என நான் எழுதிடக் காரணம் நிறையவே உண்டு.
ஸ்பெயின் கடற்கரையில் இருந்து புறப்பட்ட கொலம்பஸ், அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அப்பால் ‘இங்கே ஓர் புதிய உலகம்’ இருக்கிறது என வட, தென் அமெரிக்கக் கண்டங்களை அடையாளம் காட்டியபின், காலனி வேட்டைக்குப் புறப்பட்ட ஐரோப்பியர்கள், அங்கே குடியேறினார்கள். பல்வேறு காரணங்களால், பல இனத்தவரும் அங்கே சென்றனர். உருளைக்கிழங்குப் பஞ்சத்தில் அடிபட்ட அயர்லாந்தவர், பிழைப்புத் தேடிச் சென்றனர். அப்படிக் குடியேறியவர்கள், ஆடு மாடுகளைக் கொண்டு போவது போல், ஆப்பிரிக்கக் கண்டத்துக் கருப்பர்களை இறக்குமதி செய்தனர். பண்ட பாத்திரங்களைவிட இழிவாக இக்கருப்பர்கள் நடத்தப்பட்டதால்தான் ‘இறக்குமதி’ என்றேன். பிலடெல்பியாவில் செய்யப்பட்ட அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தில், ‘‘அனைத்து மனிதர்களும் சமம்’’ என்ற கோட்பாட்டை வெளியிட்டார்கள்.
ஆனால், மனிதர்கள் என்பதற்கான இலக்கணத்தில், கருப்பர்கள் இணைக்கப்படவே இல்லை. அக்கருப்பு இன மக்கள் பட்ட அவதி, இழைக்கப்பட்ட கொடுமைகளை விவரிக்க இயலாது. இலாயத்தில் பூட்டப்பட்ட குதிரைகளைவிட, தொழுவத்தில் கட்டப்பட்ட மாடுகளைவிட, பண்ணைகளில் அடைக்கப்பட்ட பன்றிகளைவிட, வீடுகளுக்கு உள்ளே உலவிய நாய்களைவிட மோசமாக வதைக்கப்பட்டனர். திராவிட பூமியில் ஊடுருவிய வருணாசிரமமும், மனுதருமமும் இழைத்த கொடுமைகளைவிடக் கொடூரமானவை அங்கு நடந்தவை.
நம்மைச் சுற்றிலும் என்ன நடக்கிறது? தமிழகத்துக்கு வெளியில் என்ன நடக்கிறது? பக்கத்து நாடுகளில் என்ன நடக்கிறது? தூர தேசங்களில் நடப்பது என்ன? எங்கே கலகம் விளைகிறது? எங்கே புரட்சி கருக்கொள்கிறது? எங்கே மாற்றம் விளைகிறது? என்ற அனைத்து உலகச் செய்திகளை எல்லாம், தன் பேனாவைத் தகவல் களஞ்சியமாக ஆக்கித் தந்தவர் பேரறிஞர் அண்ணா.
தரணியில் நடப்பதையெல்லாம் தம்பிகளுக்குச் சொன்னார். உலகத்துச் செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ளும், கணிப்பொறி அன்று இல்லை; இணையதளம் அன்று இல்லை; ஏன், இன்றைய நுட்பமான தொலைக்காட்சியும் இல்லை. எனினும், கானா நாட்டைப் படம்பிடித்தார், என்க்ருமாவைச் சித்தரித்தார், ஜோமோ கென்யாட்டாவைச் சொல்லி மகிழ்ந்தார். இரும்புத்திரையின் சட்டாம்பிள்ளைக்கு மார்ஸல் டிட்டோ சட்டை செய்யவில்லை என்பதை, பிரெஞ்சு நாட்டின் டிகால், கனடாவின் கியூபெக்கில் முழங்கியதை, அயர்லாந்து விடுதலை நாயகன் டிவேலராவை, துருக்கியின் கமால் பாட்சாவைக் கண்முன்னால் நிறுத்தினார். மலாயாக் காடுகளில், இலங்கையின் தோட்டங்களில், பர்மா ரங்கூன் வீதிகளில் அல்லல்படும் தமிழனின் துன்பம் தீராதோ? அவலம் நீங்காதோ? எனும் உணர்ச்சியை ஊட்டினார்.
தோழர்களே!
இதோ பிப்ரவரி 20 ஆம் நாள், கியூபாவின் புரட்சி நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோ பதவியைத் துறந்ததும், ‘இலட்சியங்களின் சிப்பாயாகத் தொடர்வேன்’ என உரைத்ததும், சிலிர்க்க வைக்கும் செய்தி! 1959 இல் சர்வாதிகாரி பாடிஸ்டாவின் இராணுவத்தை முறியடித்து, .....வானா வீதியில் வெற்றிக்கொடியுடன், புரட்சிப்படையுடன், பிடல் காஸ்ட்ரோ வலம் வந்த வரலாற்றுத் திருப்பத்தை, அன்று தம்பிக்கு மடலாகவரைந்ததும் அண்ணாதான்!
உலகப் பூந்தோட்டத்தில் ஒரு புதிய மலர்க்கொடி பூக்கிறது. அகிலத்தின் வரைபடத்தில் ஒரு புதிய தேசம் பிறக்கிறது. ஆம்; செர்பிய ஆதிக்கத்தில் இருந்து முழு விடுதலை பெற்று, இருபது இலட்சம் அல்பேனிய இன மக்களைக் கொண்ட ‘கொசோவா’ சுதந்திர இறையாண்மையுள்ள நாடாகத் தன்னைப் பிரகடனம் செய்துவிட்டது. பிப்ரவரி 17 ஆம் நாள், நம் சிந்தை அணு ஒவ்வொன்றும் மகிழ்ந்து பூரிக்கும் நாள்! ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரித்து விட்டது. நேட்டோ நாடுகள் ஏற்றுக்கொண்டு விட்டன. அமெரிக்காவும், பிரிட்டனும் ஆதரவு அளிக்கின்றன. அடிமைச்சவுக்கை வீசிய செர்பியா கொதிக்கிறது. தேசிய இனங்களைக் காலடியிலே போட்டு நசுக்க முயன்றதால், தனது வல்லரசு மண்டலம் துண்டுதுண்டான பின்பும் பாடம் கற்றுக்கொள்ளாத ரஷ்யா, கோபத்தால் மிரட்டுகிறது. கொலைவெறி ஆட்டம் போடும் சிங்கள இனவாத அரசு, ‘ஐயோ, இது அடுக்குமா?’ என ஊளையிடுகிறது.
தோள்தட்டி வரவேற்போம் - கொசோவாவின் விடுதலையை! பல்லாண்டு பாடுவோம் அச்சுதந்திரப் பிரகடனத்துக்கு! இனக்கொலை புரியும் எதேச்சதிகார அரசுகள், வரலாற்றின் புதைகுழிக்குப் போவது, தடுக்க முடியாத சம்பவத் தொகுப்பு ஆகும். சாத்தியமே இல்லை என்று சொல்லப்படுபவை நடப்பதுதான் மனிதகுல வரலாறு. அப்படி இடம் பெறுகிற ஒரு மாற்றம்தான், அமெரிக்க அரசியல் விதானத்தில்தோன்றும் காட்சி.
எங்கள் அண்ணனே! மணலுக்குள் தவம் கொள்ளும் எங்கள் தங்கமே! நீ புவியில் உதித்து நூறு ஆண்டுகள். உன் எண்ணமும், சிந்தனையும் ஆகாயம் அளாவியவை. மிசிசிப்பி நதிக்கரையில், மிருகங்களைவிடக் கேவலமாக நடத்தப்பட்ட கருப்பு மனிதர்களுக்காக, உனது உறங்காத உள்ளம் அன்று அழுதது. அதனால்தான், ‘‘வெள்ளை மாளிகையில்’’ எனும் தலைப்பில், 1966 ஆம் ஆண்டு, தம்பிக்கு மடல் தீட்டினாய். ஒன்றல்ல - இரண்டல்ல, பத்து மடல்கள். ஏறத்தாழ இரண்டரை மாதம்.
நம் தமிழகமோ அடுத்த பத்து மாதங்களில் சந்திக்கப் போகும் சரித்திர மாற்றத்துக்குத் தயாராகிக்கொண்டு இருந்தது. ஆம்; அண்ணன் உருவாக்கிய கழகம். 1967 பொதுத் தேர்தலுக்குத் தன் முழு பலத்தையும் திரட்டி ஆயத்தமாகிக் கொண்டு இருந்த நேரம். ஆனால், அதைப்பற்றி எழுதுவார் அண்ணா என தம்பியர் ஆவலோடு எதிர்பார்த்து இருந்த நேரத்தில், அண்ணா அவர்கள், இந்த இரண்டரை மாத காலம் எதைப்பற்றி எழுதினார்?
இன்று நடப்பதைப் போல அன்று அமெரிக்கத் தேர்தல் களத்தில் ஒரு கருப்பர் இனத்தவன் வேட்பாளர் ஆகி விட்டானா? இல்லை. இர்விங் வாலஸ் என்ற ஒரு நாவல் ஆசிரியர் எழுதிய ‘தி மேன்’ என்ற தலைப்பிட்ட புதினத்தில் வரும் கற்பனைச் சம்பவங்களைத் தத்ரூபமாகப் படம் பிடிக்கிறார். ஆச்சரியத்திலும் ஆச்சரியம்!
அறிஞர் அண்ணாஅவர்கள் திராவிட நாடு ஏட்டிலும், காஞ்சி ஏட்டிலும், தம்பிக்கு எழுதிய கடிதங்கள், அழியாத இலக்கியம் - சரித்திரப் பெட்டகம். பண்டித நேருவின் உலக சரித்திரக் கடிதங்களை நிகர்த்தவை. வியப்பு ஊட்டும் செய்தி யாதெனில், ஒரே பொருளைப் பற்றி அவர் அதிகக் கடிதங்கள் தம்பிக்கு எழுதியது, 'கைதி எண் 6342' எனும் தலைப்பில். அதற்கு அடுத்து, அவர் அதிக அளவில் பத்து வாரங்கள் ஒரே பொருளைப் பற்றி தம்பிக்கு எழுதிய கடிதங்கள்தாம் ‘‘வெள்ளை மாளிகையில்’’ எனும் தலைப்பிலான மடல்கள் ஆகும். அவரது உள்ளம் என்பது அடக்குமுறையை எதிர்ககும் எரிமலை அன்றோ! அதன் விளைவுதானே, அவர் தீட்டிய ‘ஆரிய மாயை’.
சனாதனத்தின் கொடுமை, அவர் இதயத்தைச் சல்லடைக் கண்களாகத் துளைத்ததால்தானே, அவர் கருஞ்சட்டைப் படையில் உலவியதும், தந்தை பெரியாரைத் தலைவராகக் கொண்டதும், ராபின்சன் பூங்காவில் தனது இயக்கத்தைத் தொடங்கியதும், அனைத்துக்கும் அதுதானே அடிப்படைக் காரணம். மனிதனை மனிதன், பிறப்பின் பெயரால் பேதப்படுத்தி வதைப்பதும், சுரண்டுவதும், அழிக்கப்பட வேண்டிய அநீதி என்பதால்தானே, வாலிப மனங்களில் கருத்துப் புரட்சியை விதைத்தார். அவரது சிந்தையும், செயலும் ஒன்றாக இருந்ததால்தான், இர்விங் வாலஸின் புதினம், அவர் மனதில் எழுப்பிய கனவு மாளிகையைத் தம்பியின் மடலில், ஓர் இலக்கியச் சித்திரம் ஆக்கினார்.
இதோ, அண்ணனின் சொற்களையே தருகிறேன்: காஞ்சி கடிதம் - வெள்ளை மாளிகையில் - 1
“தம்பி, வெள்ளை மாளிகை சென்றிடலாம், வருகிறாயா?
அமெரிக்க அதிபர் வீற்றிருக்கும் மாளிகைக்கு ‘‘வெள்ளை மாளிகை’’ என்று பெயர் இருப்பதாலேயே, மாநிறக்காரர் நுழையக்கூடாதா என்ன?
மேலும், நான் வெள்ளை மாளிகைக்கு வரச்சொல்லுவது, அதனை மனக்கண்ணால் காண்பதற்காகத்தான். நாம் மாநிறம்! ஆனால், நான் உன்னைக் காண அழைக்கும் வெள்ளை மாளிகையில் ஒரு கருப்பு மனிதர் அரசோச்சுகிறார். எனக்குள்ள ஆசை, அந்த வெள்ளை மாளிகையைக் காண்பதிலே கூட அவ்வளவு இல்லை; அங்கு ஒரு கருப்பு மனிதர் ஆட்சி செய்வதைக் காண்பதிலேதான்.
வெள்ளை மாளிகையில் ஒரு கருப்பு மனிதர்! - என்று நான் கூறுகிறேன். ஆனால், தம்பி! அந்த ஏட்டுக்கு உள்ள தலைப்பு அது அல்ல; ‘மனிதன்’ என்பதே தலைப்பு. நிறம், வடிவம், நாடு, மதம், மொழி, நிலை, எப்படி எப்படி இருந்திடினும், மனிதன் மனிதன்தானே! அந்த உயர்ந்த பண்பினை உணர்த்த வேண்டும் என்பதற்காகவே நூலாசிரியர் தமது ஏட்டுக்கு மனிதன் என்றே தலைப்பிட்டுள்ளார்.
அந்த ‘மனிதனை’க் காண்பதற்காகவே உன்னை வெள்ளை மாளிகைக்கு அழைக்கிறேன். அந்த வெள்ளை மாளிகையில், ஒரு கருப்பு மனிதரை - நீக்ரோவை - அதிபராக அமரச் செய்து பார்க்கிறார். ‘மனிதன்’ எனும் ஏடு எழுதி உள்ள இர்விங் வாலஸ் என்பவர். அந்தப் புத்தகத்தைப் படித்ததில் இருந்து, எனக்கு ஒரே ஆவல், அதை உன்னிடம் கூற வேண்டும் என்று.
ஒரு கருப்பு மனிதர் வெள்ளை மாளிகையில், ஆட்சித் தலைவராகவே அமருவது என்றால், வெள்ளை வெறியர்களின் மனம் எரிமலையாகி வெடித்து, ஆத்திரக் குழம்பினை அல்லவா கக்கிடச் செய்திடும்? துணிந்து, ஆனால் தூய நோக்கத்தோடு, நூலாசிரியர் கருப்பு மனிதரை வெள்ளை மாளிகையில் அதிபராக அமரும்படி தம் கற்பனைக்குக் கட்டளையிட்டாரே தவிர, அவருக்கேகூட, அதிக தூரம் கற்பனையை ஓடவிடக் கூடாது, நம்பவே முடியாதது இது என்று படித்திடுவோர் கருதிவிடத்தக்க விதமாகக் கதை அமைந்துவிடக்கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டு, வெள்ளை மாளிகையில் ஆட்சி அதிபராக அமரும்படி, அமெரிக்க மக்கள் நிறவெறியற்று, நிறபேதம் பார்க்காமல், ஒரு கருப்பரை குடி அரசுத் தலைவராகத் தேர்ந்து எடுத்தார்கள் என்று எழுதவில்லை; எதிர்பாராத சில நிகழ்ச்சிகளால், ஒரு கருப்பர், வெள்ளை மாளிகையில் குடியரசுத் தலைவராக அமர வேண்டிய நிலை ஏற்பட்டது என்ற அளவிலேயே தமது கற்பனையை நிறுத்திக் கொண்டார்.
‘நீக்ரோக்கள்’ மனித இனத்திலே தாடிநந்தவர்கள்; அமெரிக்கர்களை விட மட்டம்; அது இயற்கைச் சட்டம், இறைவன் திட்டம் என்று பேசிடுவோர், அறிவாலயங்களென்று கூறப்படும் பல்கலைக் கழகங்களிலே பேராசிரியர்களாக இருந்திடும் நிலை!
‘நீக்ரோக்கள்’ அமெரிக்கரின் உடைமைகள்’; எனவே, அவர்களுக்கு மனித உரிமைகள் தரப்பட்டிருக்கின்றனவா என்று பார்க்க வேண்டியது அல்ல நமது கடமை. சொத்து உரிமைச் சட்டத்தின்படி நடவடிக்கை இருக்கிறதா? என்ற பார்க்க வேண்டியதே நமது கடமை என்று பேசிடும் சட்ட நிபுணர்களைத் தாங்கிக் கொண்ட நாடு அமெரிக்கா!
‘என் உடைமை! இதனை நான் எதுவும் செய்வேன். கூடத்திலும் வைத்திருப்பேன், குப்பைமேட்டிலும் வீசுவேன். இரவல் கொடுப்பேன் அல்லது இன்னொரு பொருளுக்கு ஈடாக மாற்றிக் கொள்வேன், அல்லது உடைத்தெறிவேன்; என் விருப்பப்படி செய்வேன்; இது என் உடைமை!’’ என்று வீடு, காடு, மாடு, வண்டி, குதிரை, ஆடு போன்ற உடைமைகள் குறித்துப் பேசும்போது, ஒருவருக்கும் அந்தப் பேச்சு அக்கிரமமானது என்று தோன்றுவதில்லையல்லவா?
அமெரிக்காவில் - இன்று அல்ல, முன்பு - நீக்ரோக்கள் உயிருள்ள ஜீவன்கள் அல்ல, உரிமை பெற்ற மாந்தர் என்று அல்ல, வெறும் உடைமைகள் என்றே கருதப்பட்டு வந்த நிலை இருந்தது. தம்பி! அமெரிக்காவில் அந்த நாட்களிலே இருந்து வந்த முறை பற்றியும், நிலைமை பற்றியும் வெளிவந்துள்ள பல நுhல்களில் ஒன்று, ‘டிரம்’ (முரசு) என்ற பெயர் கொண்டது. இதிலே அப்பன், மகன், அவன் மகன் என்று மூன்று தலைமுறையினரின் வாழ்வு விளக்கப்பட்டிருக்கிறது. வாழ்வா அது? இரத்தக் கண்ணீர் விட வேண்டும் அந்த வேதனையை உணரும்போது!
‘டிரம்’ என்பவன், ஆப்பிரிக்க நீக்ரோ - இளைஞன் - கட்டுடல்! அங்கு அவன் அரசாளும் உரிமை பெற்ற மரபினன்கூட. அவனை அடிமை வியாபாரிகள் பிடித்திழுத்துக் கொண்டுபோய் விற்றுவிடுகிறார்கள், அமெரிக்கப் பண்ணையாருக்கு! அமெரிக்காவில் பருத்தி, கரும்புப் பண்ணைகள் அமைத்து பொருள் குவித்தனர் - அங்குப் பாய்ச்சப்பட்டது தண்ணீர் மட்டுமல்ல - நீக்ரோக்களின் இரத்தமும், கண்ணீரும்கூடத்தான்.
அப்படி ஒரு பண்ணையில் ‘டிரம்’ பாடுபட்ட சோகக் காதைதானே இது என்று எண்ணுகிறாயா தம்பி? அதுதான் இல்லை. இந்த ‘டிரம்’ வேலை செய்தது, விந்தையான வேறோர் பண்ணையில்! உற்பத்திப் பண்ணையில்! விளங்கவில்லையா? விளங்காது சுலபத்தில். விளங்கினாலோ, வேதனை உணர்ச்சி அடங்க நெடுநேரம் பிடிக்கும்.
ஆப்பிரிக்காவில் இருந்து நீக்ரோக்களை வேட்டையாடிப் பிடித்துக் கொண்டு வந்து, அமெரிக்காவில் விற்றுப் பொருள் குவித்து வந்தனர் கொடியவர்கள். கொடியவர்கள் என்று இப்போது கூறிவிடுகிறோம். அப்போது அவர்கள் வியாபாரிகள். கடலிலே வலைவீசி மீன்பிடித்து விற்பதில்லையா, பறவைகளைப் பிடித்து விற்பதில்லையா, மான்களையும், காட்டுப் பன்றிகளையும் வேட்டையாடிக் கொன்று அந்த இறைச்சியை விற்பதில்லையா, அதுபோலத்தான் அடிமை வாணிபம் அனுமதிக்கப்பட்டு வந்தது. எனவே, அதிலே ஈடுபட்டவர்களைக் கொடியவர் என்று அந்த நாட்களிலே கூறுவதில்லை.
விலை கொடுத்து வாங்கிய அடிமை, உழைத்து உழைத்து ஓடாகி உருக்குலைந்து, நோயால் தாக்குண்டு இறந்துபோய்விட்டால், பண்ணையார் மறுபடியும் சந்தைக்குச் சென்று வேறு அடிமைகளை விலைக்கு வாங்கிக் கொள்வார். நாளாக ஆக, இந்த அடிமைகளை ஆப்பிரிக்காவிலே இருந்து கொண்டு வந்து விற்பதற்கு ஆகும் செலவு அதிகமாகிக் கொண்டு வந்தது. புதிதாக அடிமைகளை வாங்க அதிகப்பணம் செலவிட வேண்டி வந்தது. அடிமைகள் உழைத்து உருக்குலைந்து போவதால், நாளாக ஆக அவர்களின் வேலைத்திறன் குறையலாயிற்று. தலைமுறைக்குத் தலைமுறை தேய்ந்துகொண்டு வந்தனர். அந்தப் பழைய கட்டுடல், தாக்குப் பிடிக்கும் வலிவு குறைந்துகொண்டே வந்தது.
அதிகச் செலவு, வலிவிழந்த நிலை ஆகிய இரண்டையும் கண்ட ஒரு வெள்ளை பண்ணை முதலாளி, புதுத்திட்டம் வகுத்தான். ஆப்பிரிக்காவில இருந்து புதிது புதிதாக, தொகைதொகையாக நீக்ரோக்களைப் பிடித்துக்கொண்டு வருவதைவிட, தொகையாக நீக்ரோக்களைப் பிடித்துக்கொண்டு வருவதைவிட, அமெரிக்காவிலே இடம் பெற்றுவிட்ட நீக்ரோக்களைக் கொண்டே உற்பத்தியைப் பெருக்கிக் கொண்டால் என்ன? "அமெரிக்காவிலுள்ள நீக்ரோக்களிடையே ‘பிறப்பு’ அதிகமானால், புதியபுதிய அடிமைகள் கிடைப்பார்கள் அல்லவா?" என்று எண்ணினான். அதன் விளைவாகத்தான் அந்த ஆசாமி, ‘நீக்ரோ உற்பத்திப் பண்ணை’ அமைத்தான்.
கோழிப்பண்ணை, ஆட்டுப்பண்ணை, மாட்டுப்பண்ணை நடத்துபவர்கள், தரமான ஜோடிகளை இணைத்து, உற்பத்தியின் அளவையும், தரத்தையும் பெருக்குகிறார்கள் அல்லவா, அதுபோல கட்டுடல் படைத்த தரமான நீக்ரோ இளைஞர்களைப் பருத்திக் காடுகளிலே வேலை செய்யச் சொல்லிக் கசக்கிப் பிழிவதைவிட, அவர்களுக்கு ஊட்டம் கொடுத்து வளர்த்து, வலிவும் பொலிவும் மிகுதியாகும்படிச் செய்து, அவர்களை நீக்ரோ பெண்களுடன் உறவு கொள்ளச் செய்து, உற்பத்தியைப் பெருக்குவது என்று திட்டமிட்டான். இதிலே அந்த ஆசாமி தன் திறமை முழுவதையும் செலவிட்டு, நல்ல தரமான நீக்ரோக்களைத் தனது பண்ணையில் உற்பத்தி செய்து, விற்பனை செய்து வந்தான்.
நீக்ரோப் பெண்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு உடல் பாழாகும்படியான கடினமான வேலை கொடுக்காமல், வேளா வேளைக்கு உணவு அளித்துத் தனி விடுதிகளில் இருந்திடச்செய்து, அதுபோன்றே கட்டுடல் படைத்த நீக்ரோ வாலிபர்களைத் தேர்ந்தெடுத்து அந்த விடுதிகளில் விருந்தினராக இருந்திடச் செய்வது, உறவு பெற்றவள் கருவுற்றதும், அவனை வேறு விடுதிக்குச் சென்றிட உத்திரவிட்டு விடுவது, வேறு விடுதி அந்தச் சமயம் இல்லையானால், ஆடவர் பகுதியில், தக்க சமயம் வருகிறவரையில் இருந்திடச் சொல்வது, கருவுற்றவளுக்கு வலிவு குன்றாதிருக்கத்தக்க உணவளித்து வருவது, குழந்தை பிறந்ததும், சிறிது காலம் தாயுடன் இருந்திடச் செய்துவிட்டு, பிறகு குழந்தைகள் வளர்ப்பு இடத்திற்கு எடுத்துச் சென்று வளரச் செய்வது, இப்படி ஒரு பண்ணையை நடத்தினான் அந்தப் பாதகன்.
கணவன்-மனைவி என்ற உரிமைத் தொடர்போ, தாய்-மகன் என்ற பாசத் தொடர்போ ஏற்பட விடுவதில்லை. ஆண்-பெண்-குழந்தை என்ற ஒரு தொடர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தப் பண்ணையில் தயாரிக்கப்பட்ட அடிமை என்றால், கிராக்கி அதிகம். பேசிக்கொள்கிறார்கள் அல்லவா புங்கனூர்ப் பசு, பழையகோட்டைக் காளை, மூரா எருமை என்று ‘ரகம்’ பற்றி. அதுபோல இந்தப் பண்ணைக்கு ஒரு பெயர்!
இந்தப் பண்ணையில் வந்து சேருகிறான் தம்பி, ‘முரசு’ என்ற நீக்ரோ வாலிபன், அடிமைச் சந்தைக்கு ஆட்களைப் பெற்றுக் கொடுக்கும் வேலைக்காக! அவன் பட்டபாடு, அவன் மகன், பேரன் ஆகியோர் கண்ட அவதிகள் அந்த நூலிலே விளக்கப்பட்டு இருக்கிறது. நான் முழுவதும் கூறப்போவதில்லை. நீக்ரோக்கள் விசயமாக என்னென்ன வகையான ஈனத்தனமான கொடுமைகள் இழைக்கப்பட்டன என்பதனை எடுத்துக்காட்ட மட்டுமே டிரம் பற்றிய நூலினைக் குறிப்பிட்டுக் காட்டினேன்.
அத்தகைய நீக்ரோ ஒருவன், அமெரிக்கக் குடி அரசுத் தலைவராக அமர்ந்து அரசோச்சுவது என்றால், அதிர்ச்சி அளிக்கத்தக்க அதிசயமல்லவா? ‘மனிதன்’ எனும் நூல் அந்த அதிசயத்தை அல்ல, குடியரசுத் தலைவரான கருநிறத்தான் என்னென்ன அல்லலுக்கும், ஆபத்துகளுக்கும், இன்னலுக்கும் இழிவுகளுக்கும், சூது சூழ்ச்சிக்கும் ஆளானான் என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
”தொலைநோக்குச் சிந்தனையும், வரும்பொருள் உரைக்கும் வல்லமையும், புதுயுகத்தில் விளைய வேண்டிய மாற்றம் பற்றிய வேட்கையும் கொண்ட அறிஞர் அண்ணா அவர்களின் நெஞ்சின் அலைகளைத்தான், தம்பிக்குத் தந்த மடலில் கண்டீர்கள். அவரது கருத்துகள், நம் இதயச் சுவர்களில் கல்வெட்டுகள் அன்றோ!
அண்ணா அன்று சொன்னதும், இன்று நடப்பதும், வெள்ளை மாளிகையில் மணிமகுடத்தில் ஒரு கருப்பு வைரம் ஒளிவீசும் நிலை மலர்வதும், நம் சிந்தனைச் சமவெளியில் பாயும் தேனாறு! சந்தன வாசம் வாரி வரும் பூந்தென்றல்! தழுவிடும் தென்றலில் திளைப்போம்!
உலகத்தின் கவனத்தை ஒருசேர ஈர்த்து இருக்கின்ற இன்றைய பாரக் ஒபாமா தேர்தல்களம் குறித்தும், கண்ணீர்க் காவியமான அன்றைய கருப்பர்களின் வாழ்வு குறித்தும் தொடர்ந்து உங்களுக்கு மடலாகத் தருவேன்.
தொடரும்...
No comments:
Post a Comment