சென்னை, ஜன. 13: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து பிரதமருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் அனுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதம்:
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த நமது மீனவர்கள் தனுஷ்கோடி அருகில் இந்தியக் கடல் எல்லைக்கு உள்ளே சனிக்கிழமை மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். நண்பகல் 1 மணி அளவில் அங்கே வந்த இலங்கை கடற்படையினர், கண்மூடித்தனமாக நமது மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் சேகர் என்பவர் குண்டுக்காயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் கொடுப்பது முதல் அனைத்து உதவிகளையும் செய்து, தமிழ் இனத்தை முற்றிலுமாக அழித்து ஒழிக்கும் சிங்கள இனவாத அரசின் நடவடிக்கைகளுக்கு ஐக்கிய முன்னணி அரசு துணைபோகிறது என்று நான் குற்றம் சாட்டுகிறேன். இந்தியக் குடிமக்களாகிய தமிழக மீனவர்களைப் பாதுகாக்கும் கடமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தவறி விட்டது என்பதை நான் மிகுந்த வருத்தத்துடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை நடத்தி வருகின்ற தாக்குதலை உடனடியாகத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பதுடன், இலங்கை அரசை எச்சரிக்க வேண்டும் என்றும் மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொள்கிறேன் என்று அந்தக் கடிதத்தில் வைகோ குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment