Tuesday, October 23, 2007

இந்திய அரசின் துரோகத்துக்கு கருணாநிதியே பொறுப்பு

* இலங்கைக்கான ஆயுத உதவியை சாடுகிறார் வைகோ

இலங்கை அரசுக்கு ஆயுத உதவிகளை வழங்கி ஈழத் தமிழர்களுக்கு இந்திய மத்திய அரசு செய்யும் துரோகத் தனத்துக்கு தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியே பொறுப்பேற்க வேண்டுமென ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு பீரங்கிகள், விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் போர்த் தளபாடங்களை வழங்க இந்தியா முன்வந்திருப்பது குறித்து வைகோ மேலும் தெரிவித்துள்ளதாவது;

"இலங்கையரசுக்கு இந்திய மத்திய அரசு தொடர்ந்தும் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றது. இது தமிழர்களுக்கு செய்யும் பச்சைத் துரோகமாகும். மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இத்துரோகத்தனத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். அதிலும் குறிப்பாக தமிழக முதலமைச்சர் கருணாநிதியே இதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும்.

இந்தியாவில் இருப்பதைப் போல் தமிழர்களுக்கு இரண்டு மாநிலங்களை ஒதுக்கி இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமெனக் கூறப்படுவதெல்லாம் வெறும் கானல் நீர். தமிழர்களின் உரிமைகளை கொடுக்க முடியாதென 50 ஆண்டுகளாக இலங்கை அரசு மறுத்து வருகின்றது. எனவே இத்தகைய அதிகாரப் பகிர்வு சாத்தியமானதல்ல.

தமிழினத்தை அழிக்கும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகின்றது. ஐ.நா.வின் மனித உரிமைகள் அலுவலகத்தை அமைக்கக் கூட அந்த அரசு அனுமதி மறுத்துள்ளது.
இந்நிலையில் கூட இலங்கை அரசுக்கு மத்திய அரசு ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றது. இந்த ஆயுதங்கள் தமிழ் மக்களை படுகொலை செய்யவே பயன்படப் போகின்றன.

எனவே இந்திய மத்திய அரசின் இவ்வாறான துரோகத்தன செயல்களை தட்டிக் கேட்காது, தடுக்காது மௌனம் காக்கும் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தமிழக அரசியல் கட்சிகளே குறிப்பாக தமிழக முதலமைச்சர் கருணாநிதியே இதற்கு பொறுப்பேற்க வேண்டுமெனவும்" தெரிவித்துள்ளார்.

1 comment:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும்.
ஜோதிபாரதி