Thursday, November 22, 2007

மருத்துவ மாணவர்களின் பட்டப் படிப்பை மேலும் ஓராண்டுக் காலத்துக்கு நீட்டிக்கக் கூடாது : வைகோ

சென்னை, நவ. 21 மருத்துவ மாணவர்களின் பட்டப் படிப்பை மேலும் ஓராண்டுக் காலத்துக்கு நீட்டிக்கக் கூடாது; அவ்வாறு நீட்டிப்பதற்கான நடவடிக்கையை மத்திய சுகாதாரத் துறை கைவிட வேண்டும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ கோரியுள்ளார்.

இதுதொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

வைகோ: ""மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு ஓராண்டு கிராமப்புற மருத்துவ சேவை கட்டாயம் என்கிற பெயரால் எம்பிபிஎஸ் பட்டப்படிப்பை ஆறரை ஆண்டுகளாக அதிகரிக்க மத்திய சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.

கிராமப்புறச் சேவை கட்டாயம் ஆக்கப்படும் என்று சொல்லி, மருத்துவப் படிப்பை மேலும் ஓராண்டு நீட்டிப்பது என்பது ஏதோ மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கிராமப்புறச் சேவையை எதிர்ப்பது போலவும், கிராமங்களில் பணியாற்றத் தயங்குவதைப் போலவும் ஒரு பொய்யான தோற்றத்தை ஏற்படுத்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் முயற்சிக்கிறது.

மருத்துவப் படிப்பு ஓராண்டு நீட்டிப்பு என்கிற நிலை இல்லாமல், ஏற்கெனவே உள்ள ஐந்தரை ஆண்டுகளில் ஓர் ஆண்டு கிராமப்புறச் சேவை செய்ய மாணவர்கள் தயாராக உள்ளனர்.
மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் கிராமப்புற பிற்பட்ட -தாழ்த்தப்பட்ட மாணவர்களும், நகரங்களில் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களும் பல்வேறு காரணங்களால் தற்போதைய ஐந்தரை ஆண்டுகள் மருத்துவப் படிப்பையே குறித்த காலத்தில் பயின்று மருத்துவராக ஆக முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் மேலும் ஓராண்டு படிப்பை நீட்டிப்பது அவர்களின் மீது சுமையை ஏற்றுவதைப் போல ஆகும்.''